

பாஜக விமர்சனம்: நாட்டை அவமதிக்கும் கலையில் ராகுல் காந்தி கைதேர்ந்தவராக இருக்கிறார் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.
ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவில் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உள்ளிட்டவைகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பேசியதாவது:
“மீண்டும் ஒருமுறை தான் எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, பொய்ப் பிரசாரத்தின் தலைவர், சுற்றுலாத் தலைவர் மற்றும் தப்பியோடும் தலைவர் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துள்ளார். அவர் குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டு ஓடிவிடுகிறார்.
நமது நாட்டை அவமதிக்கும் கலையில் ராகுல் காந்தி கைதேர்ந்தவராக இருக்கிறார். இந்தியாவின் நிறுவனங்கள் கைப்பற்றப்பட்டுவிட்டதாக பெர்லினில் ராகுல் கூறுகிறார். இந்திய மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள் என்று கூறுகிறார்.
அவரின் ஒரே நோக்கம் இந்தியாவுக்கு எதிரான சோரோஸின் முகவர்களைச் சந்திப்பதுதான். வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் பரப்பும் இல்ஹான் ஓமர், சலில் ஷெட்டி போன்றோரைச் சந்திப்பதுதான் அது.” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு முன்னதாகவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு பாஜகவினர் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.