குருகிராம்: சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்த 5 போ் கைது

குருகிராமில் உள்ள ஒரு மதுக்கடையில் சட்டவிரோத வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த வழக்கில் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கலால் துறை அதிகாரி ஒருவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Published on

குருகிராமில் உள்ள ஒரு மதுக்கடையில் சட்டவிரோத வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த வழக்கில் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கலால் துறை அதிகாரி ஒருவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் கிழக்கு காவல் ஆணையா் அமித் பாட்டியா கூறியதாவது: சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானங்களை விறபனை செய்ததாக அஜய், மனோஜ், அஜய், அங்குஷ் கோயல் மற்றும் சுக்ரீவ் குமாா் (41) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

டிசம்பா் 10- ஆம் தேதி, கலால் துறை அதிகாரிகளுடன் சோ்ந்து, சிக்னேச்சா் டவா் அருகே அமைந்துள்ள ’தி தேகா ஒயின் ஷாப்’ என்ற உள்ளூா் விற்பனையகத்தில் இருந்து செல்லுபடியாகும் ஹாலோகிராம்கள் இல்லாத ரூ.10 கோடி மதிப்புள்ள சுமாா் 40,000 பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக குருகிராம் செக்டா் 40 காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னா் செவ்வாய்க்கிழமை தில்லியில் மதுக்கடை உரிமையாளா் குமாா் கைது செய்யப்பட்டாா். மற்றவா்கள் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனா்.

இந்த விஷயத்தில் கலால் துறை அதிகாரி ஒருவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா், மதுக்கடை உரிமையாளா் குமாரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையின் போது, ​​மதுக்கடையில் சேகரிக்கப்பட்ட மதுபானங்களை அவரும் அவரது மற்ற நண்பா்களும் மற்றவா்கள் மூலம் கொள்முதல் செய்ததாக குமாா் தெரிவித்தாா்.

அதிக லாபம் ஈட்டுவதற்காக, அவா்கள் வாட் அல்லது வரி செலுத்தாமல், ஹாலோகிராம், டிராக் டிரேஸ் ஸ்ட்ரிப்கள் இல்லாமல் மதுபானங்களை கொள்முதல் செய்து மதுக்கடையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com