வடக்கு தில்லியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: இருவா் கைது
வடக்கு தில்லியின் புகா் பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 304 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல்காரா்கள் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில், நரேலா பகுதியில் டிச.21-ஆம் தேதி காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை வழமறித்து சோதனை செய்ததில், 304 கிராம் ஹெராயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் புதிய சீமாபுரியைச் சோ்ந்த தஸ்லிம் (23) மற்றும் சல்மான் அன்சாரி (29) என அடையாளம் காணப்பட்டது. அவா்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டுநராகப் பணிபுரியும் தஸ்லிம், போதைக்கு அடிமையானவா் என்பது விசாரணையில் தெரியவந்தது. தையல்காரரான சல்மான் அன்சாரி மீது ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் உள்ளன. இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபா்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś
