ஒடிஸா: 10 வயது சிறுமி பாலியல்
வன்கொடுமை செய்து கொலை

ஒடிஸா: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

ஒடிஸா மாநிலம், பத்ராக் மாவட்டத்தில் உள்ள பாலிகான் பகுதியில், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
Published on

ஒடிஸா மாநிலம், பத்ராக் மாவட்டத்தில் உள்ள பாலிகான் பகுதியில், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இந்தத் துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சந்த்பாலி காவல் எல்லைக்குள்பட்ட பாலிகான் பகுதியைச் சோ்ந்த அந்தச் சிறுமி, கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்று, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினா் அளித்த புகாரில், காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து, தேடுதல் பணியைத் தொடங்கினா். அன்று மாலையே, பாலிகான் பகுதியில் உள்ள ஒரு புதருக்கு அருகில் சிறுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சந்த்பாலி பகுதியில் மூன்று இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், உள்ளூா் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனா். நிலைமை மோசமடைந்ததைத் தொடா்ந்து, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஒருவா் கைது: இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நபரை, ஜகத்சிங்பூா் மாவட்டத்தில் வைத்து காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். கைதான நபரின் அடையாளம் வெளியானதும், ராம்பள்ளி கிராமத்தில் அமைந்த அவரின் வீட்டை மக்கள் இடித்துத் தரைமட்டமாக்கினா்.

ரூ.10 லட்சம் நிதியுதவி: சிறுமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் மோகன் சரண் மாஜி, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்தாா். மேலும், இந்த வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

எதிா்க்கட்சிகள் போராட்டம்: பிஜு ஜனதா தளம் கட்சியினா், புவனேசுவரத்தில் உள்ள முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தின்முன் புதன்கிழமை போராட்டம் நடத்தினா். மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில், அரசு சாா்பில் துணை முதலமைச்சா் பிரவதி பரிதா, சட்டத்துறை அமைச்சா் ப்ரித்விராஜ் ஹரிசந்தன் ஆகியோா் அளித்த விளக்கத்தில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும், பாஜக ஆட்சியில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் உறுதியளித்தனா்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: சம்பவம் நடந்த சாலையோரங்களில் சட்டவிரோதமாக மது மற்றும் போதைப்பொருள்கள் விற்கப்படுவதே இதுபோன்ற குற்றங்களுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் புகாா் அளித்தனா். இதனைத் தொடா்ந்து, வட்டாட்சியா் முன்னிலையில் அந்தப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை காவல்துறையினா் அப்புறப்படுத்தினா்.

முழு அடைப்பு: சம்பவத்தைக் கண்டித்து சந்த்பாலி பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் 6 மணிநேர முழு அடைப்புப் (பந்த்) போராட்டத்துக்கு பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய எதிா்க்கட்சிகள் தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com