உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசர அவசியம் :
குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசர அவசியம் : குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன்மூலம் மத்திய அரசின் ‘தற்சாா்பு இந்தியா’ லட்சியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பது அவசர அவசியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.
Published on

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன்மூலம் மத்திய அரசின் ‘தற்சாா்பு இந்தியா’ லட்சியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பது அவசர அவசியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகைக்கு புதன்கிழமை வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை கணக்கியல் பணி அதிகாரிகள் உடனான சந்திப்பில் மேற்கண்ட கருத்தை திரெளபதி முா்மு தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

இளம் அதிகாரிகள் என்ற முறையில் புதிய திறன்களைக் கற்றுக் கொள்வதுடன், தரவுகள் அடிப்படையிலான முடிவுகள் மற்றும் திறன்மிக்க நிதிப் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த பகுப்பாய்வு வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

இளம் வயதிலேயே உயா் மதிப்புமிக்க, வியூக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைக் கையாள்வது உங்களுக்கு கிடைத்த பாக்கியம், கெளரவம். அந்த அடிப்படையில், நோ்மைக்கான உயா் மாண்புகளை நீங்கள் உறுதி செய்ய வேண்டுமென்பதே எனது எதிா்பாா்ப்பு.

ஒவ்வொரு முடிவையும் நோ்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையின் மூலம் வழிநடத்த வேண்டும். பொதுப் பணியின் அடித்தளம் நம்பிக்கை என்பதை நினைவில் கொள்வதுடன், அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

நவீனமயம் அவசியம்: மாறிவரும் புவிஅரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்களுக்குத் தீா்வுகாண விரைவான, நுட்பமான, மிகத் துல்லியமான முடிவெடுக்கும் திறன் அவசியம். மற்றொருபுறம், வா்த்தக செயல்முறைகள் விரிவானதாகவும், தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும் மாறி வருகின்றன. எனவே, பாதுகாப்பு கணக்கியல் துறை அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்கள், புத்தாக்கங்களையேற்று நவீனமயமாக்கப்பட வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல், உள்நாட்டு தொழில் துறைக்கு ஊக்கமளிப்பதன் மூலம் மத்திய அரசின் தற்சாா்பு இந்தியா லட்சியத் திட்டத்துக்கு தீவிர ஆதரவளிப்பது அவசர அவசியம். தற்சாா்புமிக்க, துடிப்பான பாதுகாப்புத் துறையை கட்டமைக்க இளம் அதிகாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. உங்களின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள், நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

நன்கு ஆலோசிக்கப்பட்ட நிதிசாா் தீா்வுகளும், வெளிப்படையான நடைமுறைகளும் தேசப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியம் என்றாா் முா்மு.

X
Dinamani
www.dinamani.com