

பிரியங்காவுக்குள் ஒரு இந்திரா காந்தியை மக்கள் பார்க்கின்றனர் என்று பிரியங்கா காந்தியின் கணவரும் சமூக செயல்பாட்டாளருமான ராபர்ட் வதேரா தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் பொதுச் செயலரும் வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான பிரியங்கா காந்தியைப் பிரதமராக்கினால், அவரின் பாட்டியைப் போல் செயல்படுவார் என்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் காலத்தில் காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் வெளிப்படுத்திய கருத்தைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தி(53) மீதான அரசியல் பார்வை புதியதொரு கண்ணோட்டத்துக்குச் சென்றுள்ளது. இந்த நிலையில், இது குறித்து, ராபர்ட் வதேரா அளித்துள்ளதொரு பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகளைப் பார்க்கலாம் :
“யார் பிரதமராவார் என்பதைப் பற்றி நாம் முடிவெடுக்க முடியாது. (பிரியங்கா காந்தி பிரதமராவாரா? என்பதைக் குறித்து). அவர் கடுமையாக உழைக்கிறார். அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.
அவர் தமது தந்தை, பாட்டி, தாயார் மற்றும் ராகுல் காந்தியிடமிருந்து நிறையவே கற்றுக்கொள்கிறார். அவருடன் ராகுல் அங்கு இருக்கிறார். நாட்டின் ஒவ்வொரு பிரச்னையையும் எடுத்துப் பேசுகிறார்.
மக்கள் எந்த விஷயங்களையெல்லாம் வெளிப்படையாகப் பேச விரும்புகிறார்களோ அவற்றையெல்லாம் பிரியங்கா பேசி வருகிறார். மக்களின் கருத்துகளுக்கு செவிமடுத்து பொதுவெளியில் அவற்றை எதிரொலிக்கிறார். மக்கள் அனைவரும் அவருக்குள் இந்திரா காந்தியைப் பார்க்கிறார்கள்.
ஆயினும், அவருக்கென தனி ஆளுமையும் திறனும் இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர்கலம் இருப்பதை உறுதியாகச் சொல்கிறேன். மக்களுக்காக எந்த நேரத்திலும் களத்துக்குச் செல்பவராக பிரியங்கா இருக்கிறார். அதை பல்வேறு தருணங்களில் நீங்களே பார்த்திருப்பீர்கள்.
ராகுலும் மிகக் கடுமையாக உழைக்கிறார். கஷ்டம் அதிகம் வரும்போது மனிதர்கள் நிறையவே கற்றுக்கொள்வார்கள். அந்த வகையில், அவரை ஒரு வலிமையான தலைவராகவே பார்க்கிறேன்.
மேற்கண்ட இருவரும் கூட்டாளிகளாகச் சேர்ந்திருப்பது நாட்டுக்கு நலம் பயக்கும். அவர்கள் இருவருமே தாங்கள் அன்பு செலுத்தியவர்களை இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்திருக்கிறார்கள்.
இந்த நாட்டுக்கான சிறந்த எதிர்காலத் தலைவர்களாக அவர்கள் இருப்பார்கள். அதற்கு சில காலம் ஆகலாம். ராகுல் அதனை நிரூபித்தும் வருகிறார். ஆனாலும், துரதிருஷ்டவசமாக தேர்தல்களில் தோல்வியுற்றனர்.
அதற்காக நான், வாக்குத் திருட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகிய பிரச்னைகளைப் பற்றி பேச விரும்பவில்லை. அதையெல்லாம் பேச நான் அரசியல்வாதியல்ல. அது சரியாகவும் இருக்காது.
ஆனால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ’நாட்டில் நடக்கும் விஷயங்களில் அவர்கலுக்கு நம்பிக்கையில்லை’. அதனாலேயே அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது பழி சுமத்துகிறார்கள். நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
எமது குடும்பத்திலிருந்து யார் பிரதமரானாலும்கூட... ஒட்டுமொத்த நாட்டின் சார்பாக, எந்தவொரு கட்சியையும் குறிக்காமல்... நான் உள்பட எவரொருவரின் வாழ்க்கையும் அதிரடியாக மாறப்போகிறது என்று நினைக்கவில்லை.
பெண்கள் பாதுகாப்பு, மதச்சார்பின்மை, வேலைவாய்ப்பு உள்பட நாட்டில் நிலவும் உண்மையான பிரச்னைகளுக்கு ஒன்றிணைந்து ஒரே நாடாகத் தீர்வு காண முயல வேண்டும். அதிலும் குறிப்பாக, மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.