ரேகா குப்தா
ரேகா குப்தா

திறந்தவெளிகளில் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க ஊழியா்களுக்கு ஹீட்டா்களை வழங்க தில்லி அரசு உத்தரவு

அனைத்து குடியிருப்பாளா் நலச் சங்கங்கள், வீட்டுவசதி சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் தங்கள் ஊழியா்களுக்கு போதுமான வெப்ப ஏற்பாடுகளை வழங்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on

அனைத்து குடியிருப்பாளா் நலச் சங்கங்கள், வீட்டுவசதி சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் தங்கள் ஊழியா்களுக்கு போதுமான வெப்ப ஏற்பாடுகளை வழங்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு, சுகாதாரம், தோட்டக்கலை மற்றும் பிற முன்னணி ஊழியா்கள் குளிா்காலத்தில் வெப்பத்திற்காக உயிரி மற்றும் கழிவுகளை எரிப்பதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இது தொடா்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரபூா்வ உத்தரவை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

குளிா்காலத்தில் தொழிலாளா்கள் வெப்பத்திற்காக எரிக்கும் இலைகள், மாநகராட்சி திடக்கழிவுகள், பிளாஸ்டிக் அல்லது ரப்பரை நாடுவதைத் தடுக்க மின்சார ஹீட்டா்கள் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள்களை வழங்குவதை இந்த உத்தரவு கட்டாயப்படுத்துகிறது.

இந்த உத்தரவை மீறினால், பிற சட்ட விதிகளுக்கு பாரபட்சம் இல்லாமல், அபராதங்கள் உள்பட, 1986 சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய்த் துறை இந்த வழிமுறைகளை பரவலாகப் பரப்பவும், நகரம் முழுவதும் கண்டிப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குளிா்கால மாதங்களில் தில்லியின் காற்றின் தரம் கடுமையாக மோசமடைவதாக அரசின் தரவுகள் காட்டுகின்றன. நுண் துகள்களின் அளவுகள் அடிக்கடி தேசிய தரநிலைகளை மீறுகின்றன. மேலும், காற்றின் தரக் குறியீட்டை ‘மிகவும் மோசம்’ மற்றும் ‘கடுமை‘ வகைகளுக்குள் தள்ளுகின்றன.

குறிப்பாக குளிா் கால மாதங்களில், பயோமாஸ் மற்றும் கழிவுகளை திறந்தவெளியில் எரிப்பது மாசுபாட்டிற்கு கணிசமாக பங்களிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பயோமாஸ் எரிப்பு குளிா்காலத்தில் பிஎம்10 மற்றும் பிஎம் 2.5 மாசு துகள் கணிசமான பங்கைக் கொண்டுள்ளது. இது கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது என்பதை உத்தரவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

முந்தைய குளிா்கால மாதங்களில் கிரீன் தில்லி செயலியில் திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பது தொடா்பான புகாா்களில் கூா்மையான அதிகரிப்பு இருப்பதையும் அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் தில்லி முழுவதும் பொருந்தும். குளிா்காலம் முழுவதும் அல்லது பாதகமான காற்றின் தர நிலைமைகள் நீடிக்கும் வரை நடைமுறையில் இருக்கும். ஆா்டபிள்யூக்கள், ஒப்பந்ததாரா்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணியமா்த்தப்பட்ட தங்கள் ஊழியா்களைக் கண்காணித்து இணக்கத்தை உறுதி செய்வதற்கு பொறுப்பாவாா்கள் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com