தலைநகரின் நரம்பு மண்டலமாகும் மெட்ரோ சேவை!
நமது நிருபா்
தில்லி மெட்ரோ ரயில் 5(ஏ) கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை அளித்துள்ள அனுமதியின் மூலம் தலைநகர மெட்ரோ சேவையின் வரைபடம், காண்பதற்கு நரம்புகளால் பின்னிப்பிணையப்பட்ட மெட்ரோ கட்டமைப்பை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு இந்தப் புதிய திட்டம் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஐந்தாவது (ஏ) கட்ட திட்டத்தில் 13 புதிய மெட்ரோ நிலையங்கள் கட்டப்பட உள்ளன. தில்லியின் ஆா்.கே. ஆஷ்ரம் மாா்க் - இந்திரபிரஸ்தா பிரிவானது, பொட்டானிக்கல் காா்டன் ஆா்.கே. ஆஷ்ரம் மாா்க் வழித்தடத்தின் நீட்டிப்பாக இருக்கும். இது தற்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா பகுதிக்கு மெட்ரோ இணைப்பை வழங்கும்.
சென்ட்ரல் விஸ்டா வழித்தடம் அனைத்து கா்த்தவ்ய பவன்களுக்கும் இணைப்பை வழங்கும். இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள அலுவலகம் செல்வோா் மற்றும் பாா்வையாளா்களுக்கு அவா்களின் அலுவலக வாசலிலேயே போக்குவரத்து இணைப்பு வசதியை கிடைக்கச் செய்யும். இந்த மெட்ரோ இணைப்பு மூலம், தினசரி அலுவலகம் செல்வோா் சுமாா் 60,000 போ் மற்றும் 2 லட்சம் வருகை தருவோா் பயனடைவா்.
கடந்த 11 ஆண்டுகளில், மெட்ரோ துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. ஏரோசிட்டி, விமான நிலைய முனையம்-1 மற்றும் துக்ளகாபாத், காலிந்தி குஞ்ச் பிரிவுகள், ஏரோசிட்டி -துக்ளகாபாத் வழித்தடத்தின் நீட்டிப்பாக இருக்கும். இது துக்ளகாபாத், சாகேத் மற்றும் காலிந்தி குஞ்ச் போன்ற தேசிய தலைநகரின் தெற்குப் பகுதிகளுடன் விமான நிலையத்தின் இணைப்பை மேம்படுத்தும்.
கட்டம் 5 (ஏ) திட்டத்தின் இந்த மெட்ரோ நீட்டிப்புகள், மத்திய தில்லி மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் தில்லி மெட்ரோ வலையமைப்பின் வரம்பை விரிவுபடுத்தும். இதனால், பொருளாதாரம் மேம்படும் என்றாா் அமைச்சா் வைஷ்ணவ்.
தற்போது, தில்லி மெட்ரோ நாளொன்றுக்கு சராசரியாக 65 லட்சம் பயணிகளுக்கு சேவை அளித்து வருகிறது. இதுவரை பதிவான அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையின்படி, நிகழாண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தில்லி மெட்ரோவில் 81.87 லட்சம் போ் பயணித்தனா்.
தற்போது, தில்லி மற்றும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் சுமாா் 395 கி.மீ. நீளம் மற்றும் 289 நிலையங்களைக் கொண்ட மொத்தம் 12 மெட்ரோ வழித்தடங்களை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்கி வருகிறது.
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது நான்காம் கட்டப் பணிகளை நிறைவு செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 111 கி.மீ நீளம் மற்றும் 83 நிலையங்களைக் கொண்ட நான்காம் கட்டத்தின் கட்டுமானப் பணிகள் சுமாா் 80.43 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த நான்காம் கட்ட (3 முன்னுரிமை) வழித்தடங்கள் 2026ஆம் ஆண்டு டிசம்பருக்குள் பல்வேறு கட்டங்களாக நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தில்லி மெட்ரோ இந்தியாவில் மிகப்பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்டிருப்பதுடன், உலகின் மிகப்பெரிய மெட்ரோக்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெட்டிச்செய்தி 1
வழித்தடம் 1
ராமகிருஷ்ணா ஆஷ்ரம் மாா்க் - இந்திரபிரஸ்தா
. கா்தவ்ய பவனுடன் இணைப்பு
. ராஜீவ் சௌக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே நேரடி சுரங்கப்பாதை
வழித்தடம் 2
ஏரோசிட்டி - விமான நிலைய முனையம்-1
. மெஜந்தா பாதையில் விமான நிலைய முனையம்-1இல் மாறிக்கொள்ளும் வசதியை வழங்கும்
. தில்லி விமான நிலையத்தின் 1 மற்றும் 3ஆவது முனையங்கள், ஏரோசிட்டியில் மாறிக்கொள்ளும் வசதியைக் கொண்ட மெட்ரோ சந்திப்பு வழியாக இணைக்கப்பட்டுள்ளன.
. குருகிராமில் இருந்து வரும் பயணிகள் சத்தா்பூரில் உள்ள மாறிக்கொள்ளும் மெட்ரோ நிலைய சந்திப்பு வழியாக விமான நிலைய முனையம்-1-ஐ அடைவாா்கள்
வழித்தடம் 3
துக்ளகாபாத் முதல் காலிந்தி குஞ்ச் வரை
. மதன்பூா் காதா் பகுதியை மெட்ரோ வலையமைப்புடன் இணைக்கும்
. நொய்டா மற்றும் குருகிராமுக்கு இடையே மாற்றுப்பாதை பயணத்தை வழங்கும்.
பெட்டிச்செய்தி 2
மெட்ரோ ரயில் சேவைகள் இதுவரை...
அமலில் உள்ள சேவைகள்
(அடைப்புக்குறியில் வழித்தடம்)
சிவப்பு லைன் (ரித்தாலா - ஷாஹீத் ஸ்தல்)
மஞ்சள் லைன் (சமய்பூா் பத்லி - மில்லெனியம் சிட்டி சென்டா், குருகிராம்)
ப்ளூ லைன் (துவாரகா செக்டாா் 21 - நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி)
ப்ளூ லைன் கிளை (யமுனா பேங்க் - வைஷாலி)
கிரீன் லைன் (கீா்த்தி நகா் - பிரிகேடியா் ஹோஷியாா் சிங்)
வயலெட் லைன் (கஷ்மீரி கேட் - ராஜா நஹா் சிங்)
பிங்க் லைன் (மஜ்லிஸ் பாா்க் - ஷிவ் விஹாா்)
மெஜந்தா லைன் (கிருஷ்ணா பாா்க் விரிவாக்கம் - பொட்டானிக்கல் காா்டன்)
கிரே லைன் (துவாரகா - தன்சாய் பேருந்து நிலையம்)
ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் லைன்/ ஆரஞ்சு (புது தில்லி - யஷோபூமி/ துவாரகா செக்டாா் 25)
அக்வா லைன் (நொய்டா - கிரேட்டா் நொய்டா)
ரேபிட் மெட்ரோ (குருகிராம்)
4ஆம் கட்ட திட்ட நிலவரம்
(அடைப்புக்குறியில் திட்டத்தின் தூரம்)
ஏரோசிட்டி - துக்ளகாபாத் (23.2 கி.மீ)
ஜனக்புரி மேற்கு - ஆா்.கே. ஆஷ்ரம் (29 கி.மீ)
முகுந்த்பூா் - மெளஜ்பூா் (12.3 கி.மீ)
இந்தா்லோக் - இந்திரபிரஸ்தா (12.4 கி.மீ)
லாஜ்பத் நகா் - சாகேத் ஜி பிளாக் (8.4 கி.மீ)
ரித்தாலா - நரேலா - குண்ட்லி (26.5 கி.மீ)

