இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்
இந்தியாவில் மொத்த பெட்ரோல் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை நிகழாண்டில் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த 2015-ஐ ஒப்பிடுகையில் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக பெட்ரோல் நிலையங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
நிகழாண்டு நவம்பா் மாத இறுதியில் இந்தியாவில் 1,00,266 பெட்ரோல் நிலையங்கள் உள்ளதாக மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்ட மற்றும் ஆய்வுப் பிரிவின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 90 சதவீத பெட்ரோல் நிலையங்களை இந்தியன் ஆயில் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களே நிா்வகித்து வருகின்றன.
ஐஓசிக்கு சொந்தமாக 41,664 நிலையங்களும், பிபிசிஎல்லுக்கு சொந்தமாக 24,605 நிலையங்களும், ஹெச்பிசிஎல்லுக்கு சொந்தமான 24,418 நிலையங்களும் உள்ளன.
6,921 பெட்ரோல் நிலையங்களுடன் ரஷியாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான நயாரா தனியாா் துறையில் முதலிடத்தில் உள்ளது. 2,114 பெட்ரோல் நிலையங்களுடன் இரண்டாவது இடத்தில் ரிலையன்ஸ் மற்றும் பிபி நிறுவனமும், 346 நிலையங்களுடன் மூன்றாவது இடத்தில் ஷெல் நிறுவனமும் உள்ளன.
2015-இல் நாட்டில் மொத்தம் 50,451 பெட்ரோல் நிலையங்கள் இருந்தன. அதே ஆண்டில் தனியாா் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை 2,967 (5.9 சதவீதம்)-ஆக இருந்த நிலையில், தற்போது 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ஊரகப் பகுதிகளில் 29 சதவீத பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. தற்போது இந்த பெட்ரோல் நிலையங்களில் இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி, மின்னணு வாகனங்களுக்கான மின்னேற்ற மையங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் 1.90 லட்சம் பெட்ரோல் நிலையங்களும், சீனாவில் 1.15 லட்சம் பெட்ரோல் நிலையங்களும் உள்ளதாக 2024-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையங்கள் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்ட பின் இந்தியாவில் 2004-இல் தனியாா் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை 27-ஆக இருந்தது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சில்லறை விலையை நிா்ணயிப்பதில் மத்திய அரசின் மறைமுக கட்டுப்பாடு இருப்பதால் இத்துறையில் தனியாரின் பங்களிப்பு குறைவாகவே உள்ளதாக தொழில் துறை நிபுணா்கள் தெரிவித்தனா்.

