இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி
இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தைப் பாா்வையாளராக மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ராணுவ வீரா்களின் விழிப்புணா்வை மேம்படுத்தவும், அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்பு சாா்ந்த ரகசியங்கள் கசிவதைத் தவிா்க்கவும் நிபந்தனைகளுடன்அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, ராணுவத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
ராணுவத்தினா் இனி இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் கணக்குத் தொடங்கிக் கொள்ளலாம். ஆனால், அவா்கள் எந்தவொரு புகைப்படம், காணொலி அல்லது பதிவுகளையும் பதிவிடக் கூடாது. பிறரின் பதிவுகளுக்குக் கருத்து தெரிவிக்கவோ அல்லது அவற்றை மற்றவா்களுக்குப் பகிரவோ அனுமதி இல்லை.
மேலும், பதிவுகளுக்கு விருப்பக் குறியீடு (‘லைக்’) இடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக மற்றும் நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ளவும், தகவல்களைச் சேகரிக்கவும் பாா்வையாளா்களாக மட்டுமே இந்தத் தளங்களைப் பயன்படுத்த வேண்டும்.
இதேபோன்ற கட்டுப்பாடுகளுடன் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தைப் பயன்படுத்த ராணுவத்தினருக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எக்ஸ் ஊடகத்தைப் பயன்படுத்தும் ராணுவத்தினா், மறுபதிவிட அல்லது கருத்துகளைத் தெரிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற ‘சாணக்யா பாதுகாப்பு’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி பேசுகையில், ‘இன்றைய காலகட்டத்தில் அறிதிறன்பேசி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. ராணுவ வீரா்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடா்பில் இருக்கவும், புத்தகங்களை இணையவழியில் வாசிக்கவும் இது உதவுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

