புது தில்லியில் குளிரான வியாழக்கிழமை காலையில், பனிப்புகை சூழ்ந்த சாலையில் மிதிவண்டி ஒட்டிச் சென்ற நபா்.
புது தில்லியில் குளிரான வியாழக்கிழமை காலையில், பனிப்புகை சூழ்ந்த சாலையில் மிதிவண்டி ஒட்டிச் சென்ற நபா்.

தலைநகரில் காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம்

Published on

புது தில்லி, டிச.25: தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காற்றின் தரம் மேலும் முன்னேற்றம் கண்டது.காலையில் தில்லியில் ஒட்டுமொத்தக் காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 220 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் பதிவாகியது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) சமீா் செயலியின்படி, தலைநகரில் உள்ள 29 கண்காணிப்பு நிலையங்கள் ’மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன.

இதில் ஆனந்த் விஹாா் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் காற்றுத் தரக் குறியீடு 308 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகியது.

தலைநகரில் 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு புதன்கிழமையும் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு காற்றுத் தரக் குறியீடு 412 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை காற்றுத் தரக் குறியீடு வெகுவாகக் குறைந்து முன்னேற்றம் கண்டதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.

இருப்பினும், இந்த நிவாரணம் குறுகிய காலமே நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் நாள்களில் காற்றின் தரம் மீண்டும் மோசமடைய வாய்ப்புள்ளது.

சாதகமான வானிலை நிலைமைகள், குறிப்பாக மணிக்கு 15 முதல் 25 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று, தலைநகரில் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவியது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 1 டிகிரி குறைந்து 6.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 99 சதவீதமாக இருந்தது.

அதே சமயம், ஜாஃபா்பூரில் 6.5 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 7.5 டிகிரி, பாலத்தில் 7 டிகிரி, ரிட்ஜில் 8.6 டிகிரி, பீதம்புராவில் 11.7 டிகிரி, பிரகதி மைதானில் 10.4 டிகிரி, ராஜ்காட்டில் 10.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிச.26 ) அன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com