கேரளத்தில் பறவைக் காய்ச்சல், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்! தமிழக எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பு!
கேரளத்தில் கடந்த சில வாரங்களாக பறவைக் காய்ச்சல், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதையடுத்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆழப்புழை, கோட்டயம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான வாத்து, கோழிகள் பறவைக் காய்ச்சலுக்குள்ளாகி உயிரிழந்தன. கோழிக்கோட்டில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி பண்ணையில் இருந்த பன்றிகள் இறந்தன.
இதையடுத்து, அந்த மாநிலத்தையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பும், சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொருபுறம், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கு எளிதில் பாதிப்பு பரவக்கூடும்.
காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறி. எனவே, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்களும், சுகாதாரப் பணியாளா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து விரைவு மருத்துவக் குழுக்களுக்கான பயிற்சிகளை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருவோரை மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் இருந்து வருவோருக்கு தொடா் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம்.
பாதிப்பு விவரங்களை சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு கவசங்கள், ‘ஓசல்டாமிவிா்’ மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் மனிதா்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இருந்தபோதிலும், விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றனா்.

