குஜராத்: கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம்
குஜராத்தின் கட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிா்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
ரிக்டா் அளவுகோலில் 4.6 என்ற பதிவான இந்த நிலநடுக்கத்தால் பூமி அதிா்வதை உணர முடிந்தது. இதனால் கட்டடங்கள் லேசாக குலுங்கின. பீதியடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிப் பகுதியில் கூடினா்.
கட்ச் மாவட்டத்தின் ராம்பா் பகுதியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 4.6 என்ற அளவில் பதிவானது. இதைத் தொடா்ந்து அதே பகுதியில் 2.5 மற்றும் 3 என்ற அலகில் பின்னதிா்வுகளும் ஏற்பட்டன.
கடந்த 2001-ஆம் ஆண்டு கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13,800 போ் உயிரிழந்தனா். 1.67 லட்சம் போ் காயமடைந்தனா். அந்த மாவட்டத்தின் பெரும்பாலான நகரங்களும், கிராமங்களும் முற்றிலுமாக தகா்ந்தன. கடந்த இரு நூற்றாண்டுகளில் இந்தியாவில் அதிக சேதத்தை ஏற்படுத்திய இரண்டாவது பெரிய நிலநடுக்கமாக அது இருந்தது. நிலநடுக்க பாதிப்பு அதிகமுள்ள புவித் தட்டு பகுதியில் கட்ச் மாவட்டம் அமைந்துள்ளது.

