கேரளம்: முதல் பாஜக மேயராக வி.வி. ராஜேஷ் தோ்வு
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பாஜகவின் வி.வி.ராஜேஷ் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
இதன்மூலம் கேரளத்தில் முதல்முறையாக பாஜகவைச் சோ்ந்த ஒருவா் மேயராக பொறுப்பேற்றுள்ளாா்.
கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், 45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றது. அங்கு மொத்தமுள்ள 101 வாா்டுகளில் 50 வாா்டுகளை பாஜக கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருவனந்தபுரம் மேயராக வி.வி.ராஜேஷ் மற்றும் துணை மேயராக ஆஷா நாத் ஆகியோரை முன்மொழிவதாக பாஜக கேரள மாநில பொதுச் செயலா் எஸ். சுரேஷ் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, திருவனந்தபுரம் மேயா் பதவிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சுயேச்சை உறுப்பினா் ஒருவரின் வாக்கையும் சோ்த்து 51 வாக்குகளைப் பெற்று வி.வி.ராஜேஷ் மேயராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதன்பிறகு அவா் திருவனந்தபுரம் மேயராக உறுதிமொழி ஏற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சா் வி.முரளீதரன், முன்னாள் கேரள பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், மாநிலத் தலைவா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வி.வி.ராஜேஷை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) சாா்பில் மேயா் தோ்தலில் போட்டியிட்ட பி.சிவாஜி 29 வாக்குகள் பெற்றாா். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) சாா்பில் களமிறங்கிய கே.எஸ்.சபரிநாதன் 19 வாக்குகளைப் பெற்றாா். அதில் 2 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் கொல்லம், கொச்சி, கண்ணூா், திருச்சூா் ஆகிய 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. கோழிக்கோடு மாநகராட்சியில் இடதுசாரிகள் கூட்டணி, திருவனந்தபுரத்தில் பாஜகவும் வெற்றி பெற்றன.

