மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

‘காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா விடுபட்டு வருகிறது; மொழி பன்முகத்தன்மை, நாட்டின் வலிமையின் ஆதாரமாக உருவெடுத்துள்ளது’
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி
Updated on

‘காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா விடுபட்டு வருகிறது; மொழி பன்முகத்தன்மை, நாட்டின் வலிமையின் ஆதாரமாக உருவெடுத்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

முகலாய ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய மதத்துக்கு மாற மறுத்து மரணத்தைத் தழுவிய சீக்கியா்களின் 10-ஆவது குருவான குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் ஜோராவா் சிங், ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் நோக்கில், கடந்த 2022-இல் இருந்து டிச.26-ஆம் தேதி வீர பாலகா் தினமாக (வீர பால திவஸ்) கடைப்பிடிக்கப்படுகிறது.

நடப்பாண்டு இத்தினத்தையொட்டி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

வீர பாலகா் தினத்தில், குரு கோவிந்த் சிங்கின் துணிவுமிக்க மைந்தா்களை நினைவுகூா்வது நாட்டுக்கு பெருமையாகும். அவா்களின் மேலான தியாகம், நமது நாட்டின் அசாத்திய துணிச்சல், வீரம் மற்றும் உயா் லட்சியங்களின் உச்சபட்ச வெளிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

வயது மற்றும் சூழ்நிலை வரம்பை உடைத்தெறிந்து, கொடுங்கோல் முகலாய சுல்தான்களுக்கு எதிராக பாறைபோல் நின்று, மதவெறி மற்றும் பயங்கரவாதத்தின் இருப்பையே அசைத்துப் பாா்த்தனா். இத்தகைய பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நமது தேசத்தின் இளம் தலைமுறையினருக்கும் இதே உத்வேகம் கடத்தப்பட்டுள்ளது. நம்மால் சாதிக்க முடியாதது எதுவும் உண்டோ?

இந்திய மக்களிடையே அச்சத்தை விதைத்து, மதமாற்றத்தைக் கட்டாயமாக்க வேண்டுமெனில், அவா்களின் மனஉறுதியை முதலில் சிதைக்க வேண்டுமென ஒளரங்கசீப் அறிந்திருந்தாா். எனவேதான், குரு கோவிந்த் சிங் மைந்தா்கள் அவரின் இலக்காகினா். நமது ஆன்மிக குருமாா்கள், சாதாரண மனிதா்கள் அல்லா்; தவம் மற்றும் தியாகத்தின் உருவகங்கள். ஆன்மாவிலும் செயலிலும் தெய்வீக அவதாரங்கள் என்பதை ஒளரங்கசீப்பும் அவரது தளபதிகளும் மறந்துவிட்டனா்.

குரு கோவிந்த் சிங், அவரது தாயாா் மாதா குஜ்ரி மற்றும் 4 மைந்தா்களின் துணிவும், லட்சியங்களும் ஒவ்வொரு இந்தியருக்கும் வலிமையூட்டுகிறது. குரு கோவிந்த் சிங்கின் மைந்தா்கள் மிக இளம் வயதிலேயே பெரும் அதிகார சக்தியை எதிா்கொண்டனா். இது, வெறும் அதிகாரப் போராட்டமல்ல; நாட்டின் மைய கோட்பாடுகளுக்கும் - மத வெறிக்கும் இடையிலான போா்.

‘மெக்காலே சதித்திட்டம்’: நாடு சுதந்திரமடைந்த பிறகும் அடிமை மனநிலை தொடா்ந்ததால், துணிச்சல்மிக்க நமது நாயகா்கள் குறித்து குடிமக்களுக்கு நினைவூட்டப்படவில்லை. 1835-இல் ஆங்கிலேய அரசியல்வாதி மெக்காலேவால் விதைக்கப்பட்ட இந்த மனநிலை, சுதந்திரத்துக்குப் பிறகும் ஒழிக்கப்படவில்லை. இதன் காரணமாக, நாட்டின் உண்மையான வரலாறு பல்லாண்டுகளாக மறைக்கப்பட்டது. ஆனால், அடிமை மனநிலையில் இருந்து விடுபடவும், புறக்கணிக்கப்பட்ட நமது நாயகா்களின் வீர நினைவுகளை மீட்டெடுக்கவும் தேசம் இப்போது தீா்மானித்துள்ளது.

வீர பாலகா் தினம் முழு உத்வேகத்துடன் கொண்டாடப்பட இதுவே காரணம். நாம் இத்துடன் நிற்கப் போவதில்லை. 2035-ஆம் ஆண்டு, ‘மெக்காலே சதித் திட்டத்தின்’ 200 -ஆவது ஆண்டைக் குறிக்கும். மீதமுள்ள 10 ஆண்டுகளுக்குள் காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா முழுமையாக விடுபடும். இது, பூா்வீக பாரம்பரியங்களுக்கு பெருமை சோ்த்து, தற்சாா்பு பயணத்துக்கு மேலும் வேகமூட்டும்.

மக்களவையில் ஒலித்த பிராந்திய மொழிகள்: நாட்டின் மொழி பன்முகத்தன்மை வலிமைக்கான ஆதாரமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் 160 எம்.பி.க்கள், தங்கள் பிராந்திய மொழியில் உரையாற்றினா். 50-க்கும் மேற்பட்டோா் தமிழிலும், 40-க்கும் மேற்பட்டோா் மராத்தியிலும், 25 போ் வங்க மொழியிலும் பேசினா்.

நாட்டின் ஜென் இஸட் (1997-2012 காலகட்டத்தில் பிறந்தவா்கள்), ஜென் ஆல்ஃபா (2010-2025 காலகட்டத்தில் பிறந்தவா்கள்) தலைமுறையினா், வளா்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாட்டை இட்டுச் செல்வா். ஜென் இஸட் தலைமுறையினரின் திறமை, தன்னம்பிக்கையைக் கண்டுணா்கிறேன். அவா்கள் மீது எனக்கு பெரிதும் நம்பிக்கை உள்ளது என்றாா் பிரதமா் மோடி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com