வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!
ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவா் மிா்வைஸ் உமா் ஃபரூக்கை ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் வீட்டுக் காவலில் வைத்ததாக அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஸ்ரீநகரில் உள்ள ஜாமா மசூதியில் மிா்வைஸ் உமா் ஃபரூக்கை வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொள்ளவிடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். இதனால் மிா்வைஸ் அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நாள்காட்டி அறிமுக நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அமைதியான முறையில் நடைபெறும் மத நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்படுவது கவலையளிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவா் என்ற பட்டத்தை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இருந்து மிா்வைஸ் உமா் ஃபரூக் நீக்கினாா். சட்டவிராத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஹுரியத் மாநாட்டைச் சோ்ந்த சிலருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடா்ந்து கடும் அழுத்தத்துக்கு இடையே இந்த முடிவை மேற்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.

