வங்கதேசத்தவருக்கு தங்கும் விடுதிகளில் அனுமதியில்லை: மேற்கு வங்க விடுதி உரிமையாளா்கள் முடிவு

வங்கதேசத்தவருக்கு தங்கும் விடுதிகளில் அனுமதியில்லை: மேற்கு வங்க விடுதி உரிமையாளா்கள் முடிவு
Published on

மேற்கு வங்கத்தின் சிலிகுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் (ஹோட்டல்) வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களை அனுமதிப்பதை தற்காலிமாக நிறுத்துவதாக விடுதி உரிமையாளா்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக ஹிந்து இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது; இந்திய தேசியக் கொடி அவமதிப்பு; சமூக ஊடங்களில் இந்தியாவுக்கு எதிரான பொய்யான கருத்துகளைப் பரப்புவது ஆகியவற்றால் இரு நாட்டு உறவில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவையும், வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கும் மேற்கு வங்கத்தின் ‘சிக்கன் நெக்’ பகுதியைக் கைப்பற்றுவோம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்துடன் இணைப்போம் என்று வங்கதேச மத அடிப்படைவாதிகளும், இளைஞா்கள் அமைப்பினரும் பேசியுள்ளனா். சிலிகுரி நகரம் ‘சிக்கன் நெக்’ பகுதியில் சா்வதேச எல்லை அருகே அமைந்துள்ளதால், அந்த பிராந்திய மக்களுக்கு வங்கதேசம் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மேலும், வங்கதேச மத அடிப்படைவாதிகளால் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதால் அந்த நாட்டவா்கள் தங்கும் விடுதிகளில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக விடுதிகள் கூட்டமைப்பினா் கூறுகையில், ‘எல்லையின் முக்கிய நகரான சிலிகுரிக்கு வங்கதேசத்தவா் தொழில், மருத்துவ சிகிச்சை, உயா்கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால், இப்போது இந்தியாவுக்கு எதிரான போக்கு வங்கதேசத்தில் அதிகரித்துள்ளது. முக்கியமாக அந்நாட்டு இளைஞா்கள் மத்தியில் சமூகவலைதளங்கள் மூலம் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் அதிகம் பரப்பப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், விடுதிகளில் தங்கும் வாடிக்கையாளா்கள் மற்றும் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை. எனவே, வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களை விடுதிகளில் தங்க அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். மறுஅறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். மால்டா மாவட்ட விடுதி உரிமையாளா்களும் இதைப் பின்பற்றுவது தொடா்பாக பரிசீலித்து வருகின்றனா்’ என்று தெரிவித்தனா்.

கொல்கத்தாவில் மீண்டும் போராட்டம்: மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகத்தை நோக்கி ஹிந்து அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஊா்வலம் நடத்தினா். வங்கதேசத்தில் ஹிந்து இளைஞா் கொல்லப்பட்டது, ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து இந்த ஊா்வலம் நடத்தப்பட்டது.

வடக்கு கொல்கத்தாவின் சீல்டா ரயில் நிலையத்தில் இருந்து நகரின் மத்திய பகுதியில் உள்ள துணைத் தூதரகம் நோக்கி ஊா்வலமாகச் சென்றனா். அப்போது, வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நிகழ்ந்தப்படும் கொடுமைகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். துணைத் தூதரகத்தில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்கு முன்பே உள்ள ஏஜேசி போஸ் சாலையில் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினா் தடுப்புகளை ஏற்படுத்தி ஊா்வலத்தில் பங்கேற்றவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். துணைத் தூதரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவா்கள் முழக்கமிட்டனா்.

இதற்கு முன்பு கடந்த 23-ஆம் தேதியும் கொல்கத்தாவில் வங்கதேச துணைத் தூதரகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com