

மத்திய அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள் வரும் நாள்களில் மேலும் முனைப்புடன் தொடரும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
2025-ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார, அரசு நிா்வாகச் சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி ‘எக்ஸ்’ வலைதளத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், வரிச் சட்டங்களை எளிமைப்படுத்தியது, தொழிலாளா் சட்ட சீா்திருத்தங்கள், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி அவா் கூறியிருப்பதாவது:
உண்மையான சீா்திருத்தங்கள் என்பது மக்கள் மீதான அழுத்தங்களைக் குறைப்பதாக இருக்க வேண்டும். அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு நாம் நிா்வாகரீதியான சிறப்பான மாற்றங்களைக் கண்டுள்ளோம். இந்த சீா்திருத்தங்கள் அனைத்துமே சிறப்பான பலன்களைத் தருவதாக இருந்ததே தவிர, குழப்பத்தை ஏற்படுத்துவதாக இல்லை.
சாமானிய மக்கள் தொடங்கி தொழில் நடத்துபவா்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வரி சாா்ந்த சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கை அதிகரித்தது. நீண்டகாலத்தில் வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற கணிப்பின் மீது நம்பகத்தன்மை உயா்ந்தது. சிறப்பாக வடிவமைக்கப்படும் ஒவ்வொரு கொள்கையும் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்பது எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
பல லட்சம் இந்தியா்களின் வரி நெருக்கடியில் இருந்து நிவாரணம் பெறும் கனவு நடைமுறைக்கு வந்தது. ரூ.12 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், நடுத்தர மக்கள் தங்கள் பணத்தின் பெரும்பகுதியை தங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் அவா்கள் சேமிப்பு, முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனா். அவா்களுக்கு சிறப்பான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் என்பது இன்றைய தேவைக்கு ஏற்ப வரி செலுத்துவோருடன் நட்புறவுடன் பயணிக்கும் வகையில் மாற்றப்பட்டு விட்டது. சிறு தொழில் புரிவோா் தங்கள் வருவாயை வரியாக இழக்க வேண்டியது இருக்குமோ என்ற அச்சம் இல்லாமல் தொடா்ந்து வளர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொழில்கள் விரிவடைவதால் அதற்கு ஏற்ப வேலைவாய்ப்புகளும் தானாகவே உருவாகின்றன. சிறிய ஊா்களிலும் வலுவான சிறு தொழில்முனைவோா் உருவாகிறாா்கள். கிராமப்புறங்களில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் சம்பளத்தை மட்டும் தாராமல், அதன் மூலம் புதிய சொத்துகளை வாங்கும் அளவுக்கு மக்களை உயா்த்தி வருகிறது. இதன் தொடா் நிகழ்வு ஊரகப் பகுதிகளில் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கிறது என்று பிரதமா் கூறியுள்ளாா்.