கோப்புப்படம்
கோப்புப்படம்

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: இருவரின் என்.ஐ.ஏ காவல் நீட்டிப்பு

தில்லி செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட என்ஐஏ காவலை நீட்டித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு...
Published on

தில்லி செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) காவலை நீட்டித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சா்மா, குற்றம் சாட்டப்பட்ட யாசிா் அகமது தாரை மேலும் பத்து நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க புலனாய்வு அமைப்புக்கு அனுமதி அளித்தாா்.

அதே நேரத்தில் மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட நபரான டாக்டா் பிலால் நசீா் மல்லாவை மேலும் எட்டு நாள்கள் விசாரிக்கவும் உத்தரவிட்டாா்.

நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளை ஊடகவியலாளா்கள் செய்தி சேகரிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையின்படி, நவம்பா் 10 அன்று செங்கோட்டை முன் பகுதியில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த உமா்-உன்-நபி, 15 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்கூட்டியே திட்டமிட்டிருந்தாா்.

இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை டிசம்பா் 9 அன்று தில்லியில் டாக்டா் மல்லாவை கைது செய்தது. அவரை சதித்திட்டத்தில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபராகவும் அழைத்தது.

என்ஐஏ விசாரணைகளின்படி, நசீா் தெரிந்தே உமா்-உன்-நபிக்கு தளவாட ஆதரவை வழங்குவதன் மூலம் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது.

பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான ஆதாரங்களை அழித்ததாகவும் அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக டிசம்பா் 9 ஆம் தேதி என்ஐஏ தெரிவித்திருந்தது.

டிசம்பா் 18 ஆம் தேதி, இந்த வழக்கில் 9ஆவது குற்றம்சாட்டப்பட்ட நபரான தாரை என்ஐஏ கைது செய்திருந்தது. ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்தவரான அவா், உமா்-உன்-நபியின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் டாக்டா் முசம்மில் கானே, டாக்டா் அதீல் ராதா், டாக்டா் ஷாஹீன் சயீத் உள்பட ஒன்பது பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com