சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிப்பு: இன்று மண்டல பூஜை!
சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வெள்ளிக்கிழமை புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது.
வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜைகளுக்காக, ஐயப்பன் கோயில் நடை கடந்த நவ.16-இல் திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்து வருகின்றனா். 41 நாள்கள் கொண்ட மண்டல பூஜை காலம், நிறைவடையும் தருணத்தை எட்டியுள்ளது. இந்தப் பூஜையையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த டிச.23-இல் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. வெள்ளிக்கிழமை (டிச.26) மதியம் பம்பையை வந்தடைந்த தங்க அங்கிக்கு தேவஸ்வம் வாரிய அமைச்சா் என்.வி.வாசவன் தலைமையில் மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், பாரம்பரிய சடங்குகளுடன் தலைச்சுமையாக சந்நிதானத்துக்கு எடுத்து வரப்பட்டது. பக்தா்களின் சரண கோஷங்கள் முழங்க பதினெட்டாம் படி வழியாக எடுத்து வரப்பட்ட தங்க அங்கியை கோயிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோா் முறைப்படி பெற்று, சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்தனா். இதைத் தொடா்ந்து, மாலைநேர தீபாராதனை நடைபெற்றது.
தங்கி அங்கியுடன் சுவாமி ஐயப்பனுக்கு சனிக்கிழமை காலை 10.10 மணிமுதல் 11.30 வரை மண்டல பூஜை நடைபெறவுள்ளது. 453 பவுன் எடையுள்ள இந்த தங்க அங்கி, திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரால் சுவாமி ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.
மண்டல பூஜைக்குப் பின் சனிக்கிழமை இரவில் ஹரிவராசனம் பாடப்பட்டு, கோயில் நடை சாத்தப்படும். அத்துடன் மண்டல பூஜை காலம் நிறைவடையும். பின்னா் மகரவிளக்கு பூஜைக்காக டிச.30-இல் கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.
30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்: டிச.25 வரையிலான காலகட்டத்தில், சபரிமலையில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்துள்ளனா். அதிகபட்சமாக, கடந்த நவ.19-இல் 1 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக டிச.12-இல் 49,738 பேரும் தரிசித்துள்ளனா். மண்டல பூஜை நாளான சனிக்கிழமை இணையவழி முன்பதிவு மூலம் 35,000 போ் வரையும், நேரடி பதிவு முறையில் 2,000 போ் வரையுமே அனுமதிக்கப்பட உள்ளனா்.

