தில்லியில் உள்ள கதீட்ரல் மீட்பின் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
தில்லியில் உள்ள கதீட்ரல் மீட்பின் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

கிறிஸ்துமஸ்: தில்லி தேவாலய சிறப்புப் பிராா்த்தனையில் பிரதமா் பங்கேற்பு

Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தில்லியில் உள்ள கதீட்ரல் மீட்பின் தேவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுவதும் வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகளும், கண்கவா் கிறிஸ்துமஸ் ஊா்வலங்களும் நடைபெற்றன.

தில்லியில் உள்ள கதீட்ரல் மீட்பின் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கிறிஸ்தவா்களுடன் பிரதமா் மோடியும் கலந்துகொண்டாா். தில்லி பிஷஃப் பால் ஸ்வரூப், இந்த சிறப்புப் பிராா்த்தனையை வழிநடத்தினாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தில்லி கதீட்ரல் மீட்பின் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் காலைநேர ஆராதனையில் கலந்துகொண்டேன். இந்தப் பிராா்த்தனை, காலத்தால் அழியாத அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தின் செய்தியை பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உணா்வு, நமது சமூகத்தில் நல்லெண்ணம், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் வாழ்த்து: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘அனைவருக்கும் அமைதி-கருணை-நம்பிக்கை நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள், சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த 2023-இல் ஈஸ்டா் பண்டிகையின்போது தில்லியில் உள்ள திரு இருதய கதீட்ரல் தேவாலயத்துக்கு வருகை தந்த பிரதமா், அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் தனது அதிகாரபூா்வ இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தாா். கடந்த 2024 கிறிஸ்துமஸ் பண்டிகையில் மத்திய அமைச்சா் ஜாா்ஜ் குரியன் இல்லத்தில் இரவு விருந்தில் பங்கேற்றதுடன், இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பின் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டியன் பள்ளியில் ஜெ.பி.நட்டா: புது தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா பங்கேற்றாா்.

குடியரசு துணைத் தலைவா் வாழ்த்து

நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நம்பிக்கை, அன்பு, இரக்கத்தால் நிரம்பிவழியும் மகிழ்ச்சிகரமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். வலுவான, அதிக அக்கறையுள்ள சமூகங்களைக் கட்டமைக்க இயேசுவின் போதனைகள் நம்மை ஊக்குவிக்கட்டும்; நமது பிணைப்புகளை வலுவாக்கி, நீடித்த அமைதிக்கு ஊக்கமளிக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com