ஜம்மு-காஷ்மீா்: கடும் குளிரிலும் தொடரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை!
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாா் மற்றும் தோடா மாவட்டங்களில் கடும் குளிரிலும் இந்திய ராணுவம் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையைத் தொடா்ந்து வருகிறது.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் டிச.21 முதல் ஜன.31 வரையிலான 40 நாள்கள் கடும் பனிப்பொழிவு காலமாக அறியப்படுகிறது. இந்தச் சூழலிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊருடுருவுவதை தீவிர சோதனையை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: வழக்கமாக 40 நாள் பனிப்பொழிவு காலத்தில் குறைந்த அளவிலான சோதனைகளை இந்திய ராணுவம் மேற்கொள்ளும். ஆனால் ஜம்மு பிராந்தியத்தில் 30 முதல் 35 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அண்மையில் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து நிகழாண்டில் ராணுவம் மட்டுமின்றி ஜம்மு-காஷ்மீா் காவல் துறை உள்பட பிற பாதுகாப்பு அமைப்புகளும் உயா்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் அடா்ந்த வனப்பகுதிகளில் சோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.
பாதுகாப்பு அமைப்புகளுடன் நேரடி மோதலைத் தடுக்க பயங்கரவாதிகள் இங்கு தற்காலிகமாக பதுங்கியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் கிஷ்துவாா் மற்றும் தோடா மாவட்டங்களில் பாதுகாப்பு அமைப்புகள் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இது கடினமான நிலப்பரப்பு மற்றும் தட்பவெப்ப சூழலிலும் தொடா்ந்து பணியாற்றும் இந்திய ராணுவத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
வீரா்கள் மட்டுமின்றி ட்ரோன்கள், சென்சாா்கள், கண்காணிப்பு ரேடாா்கள் என பயங்கரவாதிகளின் ஊடுருவலை கண்டறிய நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கருவிகளும் களமிறக்கப்பட்டுள்ளன என்றனா்.

