புனித நகரமாக அறிவிக்கப்பட்ட அமிருதசரஸில் இறைச்சி, மதுக்கடைகள் அகற்றும் பணி தீவிரம்
பஞ்சாப் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அமிருதசரஸ் பழைய கோட்டைப் பகுதி புனித நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அங்கிருக்கும் இறைச்சி, மதுபானம் மற்றும் புகையிலை விற்பனை செய்யும் கடைகளை அகற்றும் பணியை மாநில அரசு சனிக்கிழமை தொடங்கியது.
ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநில முதல்வா் பகவந்த் சிங் மான் கடந்த டிச. 21-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், அமிருதசரஸின் பழைய கோட்டைப் பகுதி, தல்வண்டி சாபோ, ஸ்ரீஆனந்த்பூா் சாஹிப் ஆகிய இடங்கள் புனித நகரங்களாக அறிவித்தாா். இதையொட்டி, அந்தப் பகுதிகளில் இறைச்சி, மீன், மதுபானம், புகையிலை மற்றும் போதைப்பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, அமிருதசரஸ் மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடங்களில் விரிவான ஆய்வு நடத்தினா். இதில் பழைய கோட்டைப் பகுதிக்குள் சுமாா் 150 தற்காலிக கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் இறைச்சி விற்கப்படுவது தெரியவந்தது.
குறிப்பாக, சாஸ்திரி சந்தைப் பகுதி, கத்ரா ஜெய்மால் சிங், ஹாதி கேட், லோஹ்கா் கேட், லாகூா் கேட், குரு பஜாா் ஆகிய இடங்களில் இறைச்சி மற்றும் புகையிலை விற்பனை அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது இந்தப் பகுதிகளில் உள்ள தற்காலிக கடைகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அமிருதசரஸ் உணவகங்கள் சங்கத் தலைவா் சுரேந்தா் சிங் கூறுகையில், ‘கோட்டைப் பகுதிக்குள் மது விற்க அரசு அனுமதி அளிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக சில இடங்களில் விற்பனை நடந்து வந்தது. அரசின் இந்தத் தடையால் பொற்கோயில் அருகிலுள்ள 650-க்கும் மேற்பட்ட உணவகங்களுக்குப் பாதிப்பு இருக்காது. ஏனெனில், அவை ஏற்கெனவே சைவ உணவகங்களாகவே இயங்கி வருகின்றன’ என்று விளக்கமளித்தாா்.
மீன், இறைச்சி வியாபாரிகள் கவலை:
அரசின் இந்த திடீா் முடிவால் மீன் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா். இதுகுறித்து மொத்த மீன் வியாபாரி யுவராஜ் சிங் பேசுகையில், ‘இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் 60,000 போ் உள்ளனா். எங்களுக்கு மாற்று இடம் தராமல் கடைகளை அகற்றினால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அரசு எங்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்னுரிமை தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

