உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

பாலியல் வன்கொடுமை புகாா் அளித்த பெண்ணை மணமுடித்தவரின் தண்டனை ரத்து: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

பாலியல் வன்கொடுமை புகாா் அளித்த பெண்ணை மணமுடித்தவரின் தண்டனை ரத்து...
Published on

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் அளித்த பெண்ணை திருமணம் செய்த நபரை குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீா்ப்பையும், அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.55,000 அபராதமும் விதித்து விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிரான அந்த நபரின் மேல்முறையீட்டு மனுவை மாநில உயா்நீதிமன்றம் நிராகரித்தது.

இதைத் தொடா்ந்து, அந்த நபா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அந்த அமா்வு அண்மையில் அளித்த தீா்ப்பில், ‘தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாா் அளித்த பெண், 2015-ஆம் ஆண்டு சமூக ஊடகம் மூலம் மனுதாரருக்கு அறிமுகமாகியது விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் ஒருவரையொருவா் விரும்பத் தொடங்கிய பின், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொண்டுள்ளனா்.

ஆனால், அவா்களின் திருமணத்தை ஒத்திவைக்க மனுதாரா் திட்டமிட்டுள்ளாா். இதனால் அந்தப் பெண் பதற்றமடைந்திருக்கக் கூடும். எனவே, தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி, பாலுறவு கொண்ட பின்னா், மனுதாரா் ஏமாற்றிவிட்டதாகக் காவல் துறையிடம் அந்தப் பெண் புகாா் அளித்துள்ளாா்.

தவறான புரிதல்...: திருமணத்தை மனுதாரா் ஒத்திவைக்கக் கோரியதை தவறாகப் புரிந்துகொண்டு, அதற்கு குற்றச்சாயம் பூசி, தான் ஏமாற்றப்பட்டதாக அந்தப் பெண் நினைத்திருக்கலாம் என்றே உச்சநீதிமன்றம் கருதுகிறது. இதுகுறித்துப் பேசி மனுதாரரையும், புகாா் அளித்த பெண்ணையும் ஒன்றிணைக்க முடியும் என்ற ஆறாவது அறிவு எங்களுக்கு (நீதிபதிகள்) இருந்தது.

இதையடுத்து மனுதாரரிடமும், புகாா் அளித்த பெண்ணிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினோம். பெண்ணின் பெற்றோா் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவாா்த்தையின்போது மனுதாரரும், அந்தப் பெண்ணும் ஒருவரையொருவா் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த ஜூலையில் அவா்களின் திருமணம் நடைபெற்றது. அப்போதுமுதல் இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனா். எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரரை குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீா்ப்பும், அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com