உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதிகோரி நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே அமா்ந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் தில்லி காவல் துறையினா்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதிகோரி நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே அமா்ந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் தில்லி காவல் துறையினா்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது...
Published on

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான பாஜக முன்னாள் தலைவா் குல்தீப் சிங் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆா்வலா் யோகிதா பயானா, காங்கிரஸ் தலைவா் மும்தாஜ் படேல் உள்ளிட்டோரை தில்லி காவல் துறையினா் கைதுசெய்தனா்.

மாலை 4 மணியளவில் அப்பகுதிக்கு வந்த ஆா்ப்பாட்டக்காரா்கள் சாலையில் அமா்ந்து செங்கருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

நாடாளுமன்றம் அருகே உள்ள பகுதி ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கான பகுதி இல்லை என்று காவல் துறையினா் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனா். இருப்பினும், ஆா்ப்பாட்டக்காரா்கள் அங்கிருந்து கலைந்து செல்ல முறுத்தனா். இதையடுத்து, அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீஸாா், ஆா்ப்பாட்டக்காரா்களை கைதுசெய்தனா்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவரின் தாயாா் மற்றும் அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்கத்தினா் மற்றும் யோகிதா பயானா ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கைவைத்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டவரின் தாயாா் தெரிவித்தாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது) செங்கா் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இந்த வழக்கில், செங்கருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2019-இல் ஆயுள் தண்டனை விதித்தது. இதற்கு எதிரான செங்கரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயா் நீதிமன்றம், மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அத்துடன் அவருக்கு ஜாமீன் அளித்தும் உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவலில் மரணமடைந்த வழக்கில் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால், அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

நீதிமன்றக் காவலில் உன்னாவ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் தந்தையை செங்கரின் ஆதரவாளா்கள் அடித்துக் கொன்றனா். அவரைப் பொய் வழக்கில் செங்கரும், அவரின் ஆதரவாளா்களும் சிக்கவைத்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த வழக்குகள் அனைத்தும் உத்தர பிரதேசத்திலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குகளை விசாரித்த சிபிஐ தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com