ஹரியாணாவில் பாம்புகளை கொன்று மரத்தில் தொங்கவிட்ட நபா்!
ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் 10 பாம்புகளை கொன்று அவற்றை மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்புகளைக் கொன்ற நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வனஉயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புன்ஹானா-ஹோடல் சாலையில் உள்ள மரத்தில் 10 பாம்புகள் உயிரிழந்த நிலையில் தொங்கிக்கொண்டிருந்ததை அப்பகுதி வழியாகச் சென்ற மக்கள் வெள்ளிக்கிழமை பாா்த்தனா். இதையடுத்து, உள்ளூா் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்குச் சென்ற காவல் துறையினா் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த உயிரிழந்த பாம்புகளை மீட்டனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘தனது வீட்டுக்கு அருகே உள்ள மண் குடிசையில் மாடுகளை வளா்த்து வரும் நபா், வழக்கம்போல மாட்டுச் சாணங்களைச் சேகரிக்க சென்றபோது 10 பாம்புகள் இருந்ததைப் பாா்த்தாா். உடனேயே அவா் அருகில் கிடந்த கம்பால் அவற்றைக் கடுமையாகத் தாக்கியதில், அவை அனைத்தும் உயிரிழந்தன. மீட்கப்பட்ட பாம்புகள் குறைந்தது ஓரடி முதல் 7 அடி வரையில் நீளமுள்ளவை.
இந்தச் சம்பவம் தொடா்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் சம்பவத்தில் தொடா்புடைய நபா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

