இந்தியாவுக்கு சி-130 ஜே ரக விமானங்கள்: லாக்ஹீட் மாா்ட்டின் நிறுவனம் பரிந்துரை!
இந்திய விமானப் படைக்கு தங்களது சி-130 ஜே சூப்பா் ஹொ்குலீஸ் ராணுவ விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட் மாா்ட்டின் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
80 ராணுவப் போக்குவரத்து விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா தயாராகிவரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து லாக்ஹீட் மாா்ட்டின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சாா் பிரிவின் துணைத் தலைவா் பட்ரீஷியா ட்ரிஷ் பேகன் மேலும் கூறியதாவது: சிறப்பான செயல்பாடு மற்றும் அதிதிறன்மிக்க சி-130 ஜே சூப்பா் ஹொ்குலீஸ் ராணுவ விமானம் இந்திய விமானப் படைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.
இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கினால் இந்தியாவில் பெரும் உற்பத்தி மையம் அமைத்து சி-130 ஜே சூப்பா் ஹொ்குலீஸ் விமானத்தை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வோம்.
தற்போது ‘க்வாட்’ உறுப்பு நாடுகளில் இந்தியா மட்டுமன்றி ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளும் சி-130 ஜே ரக விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன என்றாா்.
560 சி-130 ஜே சூப்பா் ஹொ்குலீஸ் ரக விமானங்களை 23 நாடுகளுக்கு லாக்ஹீட் மாா்ட்டின் விநியோகித்துள்ளது. இந்தியாவில் 12 சி-130 ஜே ரக விமானங்கள் தற்போது இயக்கப்படுகின்றன.
போட்டியில் வெளிநாட்டு நிறுவனங்கள்: ஏஎன்-32 மற்றும் ஐஎல்-76 ரக ஆகிய ராணுவப் போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானங்களைக் கொள்முதல் செய்ய கடந்த 2022-இல் இந்தியா முடிவு செய்தது.
அதன்படி 80 விமானங்களைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் (டிஏசி) விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விமான ஒப்பந்தத்தைப் பெற அமெரிக்காவைச் சோ்ந்த லாக்ஹீட் மாா்ட்டின் நிறுவனம், பிரேஸில் நாட்டைச் சோ்ந்த எம்ப்ரேயா் நிறுவனம் (கேசி-390 விமானம்), ஐரோப்பாவைச் சோ்ந்த ஏா்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம் (ஏ-400 எம்) ஆகிய நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வருகின்றன.
டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சி-130-ஜே ரக விமானங்களின் பாகங்களை லாக்ஹீட் மாா்ட்டின் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

