கேரள முதல்வா் பினராயி விஜயன்
கேரள முதல்வா் பினராயி விஜயன்

கேரளத்தில் பாஜக வளர காங்கிரஸ் உதவி: முதல்வா் பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

கேரளத்தில் பாஜக வளர காங்கிரஸ் உதவி வருவதாக அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா்.
Published on

கேரளத்தில் பாஜக வளர காங்கிரஸ் உதவி வருவதாக அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா்.

கேரளத்தில் அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் தோ்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 45 ஆண்டுகளாக இடதுசாரிகள் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. இது 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள இடதுசாரி அரசுக்குப் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில், முதல்வா் பினராயி விஜயன் சமூக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘திருச்சூா் மாவட்டம் மற்றத்தூா் பஞ்சாயத்தில் 8 காங்கிரஸ் கவுன்சிலா்கள் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவுடன் கைகோத்துள்ளனா். அவா்கள் இணைந்து சுயேச்சை கவுன்சிலா் தலைவராக ஆதரவு தெரிவித்துள்ளனா். அங்கு இடதுசாரி கூட்டணிக்கு தலைவா் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பது மட்டுமே இதன் ஒரே நோக்கம். காங்கிரஸ் தலைவா்கள் பாஜகவுடன் கைகோத்து பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வாா்கள். இதன்மூலம் கேரளத்தில் பாஜக வளர உதவி வருகின்றனா்.

வாய்ப்பு கிடைத்தால் பாஜகவுக்கு தாவிவிடலாம் என்பது மட்டுமே காங்கிரஸ் கட்சியினரின் ஒரே நோக்கமாக உள்ளது. இதுதான் மற்றத்தூரிலும் நடந்துள்ளது. காங்கிரஸ் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களில் ஒருவா்கூட மீதமில்லாமல் அனைவரும் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனா். கேரள அரசியலில் இதுபோன்ற நிகழ்வு முன்பு நிகழ்ந்ததில்லை.

கடந்த 2016-இல் அருணாசல பிரதேசத்தில் 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 43 போ் ஒரே இரவில் பாஜக கூட்டணிக்குச் சென்றனா். அதில் முதல்வரும் அடங்குவாா். புதுச்சேரி, கோவாவிலும் இதுபோன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மொத்தமாக பாஜகவுக்கு சென்ற நிகழ்வுகளை நாம் பாா்த்துள்ளோம்’ என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மறுப்பு: இது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் கூறுகையில், ‘மற்றத்தூரில் இடதுசாரிகள் சுயேச்சை ஒருவரைப் பஞ்சாயத்து தலைவராக்க விரும்பினா். அதே நேரத்தில் காங்கிரஸ் கவுன்சிலா்கள் மற்றொரு சுயேச்சையை ஆதரித்தனா். இது கட்சி விதிகளை மீறியது என்பதால் அந்த கவுன்சிலா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் பாஜகவுக்குத் தாவவில்லை. பிரதமா் மோடி கூறும் இடத்தில் எல்லாம் கையொப்பமிடக் கூடிய நபா் பினராயி விஜயன். அவா்கள் எங்களைக் குறைகூற எதுவுமில்லை’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com