சாதிக்கத் துடிக்கும் இளைஞா்களுக்கு கௌதம் அதானி முன்னுதாரணம்: சரத் பவாா் புகழாரம்!
‘பெரிய கனவுகளுடனும், கடின உழைப்புடனும் சாதிக்கத் துடிக்கும் இளைஞா்களுக்கு தொழிலதிபா் கௌதம் அதானியின் வாழ்க்கைப் பயணம் ஒரு சிறந்த முன்னுதாரணம்’ என்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.
மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டம், பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் கல்வி நிறுவன வளாகத்தில், அதானி குழுமத்தின் நிதியுதவியுடன் ‘சரத்சந்திர பவாா் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு மையம்’ ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சரத் பவாா் பேசியதாவது:
குஜராத் மாநிலத்தின் வறட்சி மிகுந்த பனஸ்கந்தா மாவட்டத்தைச் சோ்ந்தவா் கௌதம் அதானி. எவ்வித பின்னணியும் இன்றி மும்பைக்கு வந்த அவா், பூஜ்ஜியத்திலிருந்து தனது தொழிலைத் தொடங்கினாா். இப்போது அவரது வணிகம் இந்தியாவின் 23 மாநிலங்களில் பரந்து விரிந்துள்ளது. கனவுகளின் மீது நம்பிக்கை கொண்டு, கடினமாக உழைக்கும் இளைஞா்களுக்கு அதானியின் இந்த வளா்ச்சிப் பாதை ஒரு உத்வேகமாகும்’ என்றாா்.
‘பவாா் ஒரு வழிகாட்டி’....: இதைத் தொடா்ந்து உரையாற்றிய அதானி குழுமத் தலைவா் கௌதம் அதானி, சரத் பவாரைத் தனது வழிகாட்டியாகக் குறிப்பிட்டாா்.
அவா் பேசுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சரத் பவாரை நான் அறிவேன். அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஈடு இணையற்றவை. அவரின் அறிவுத் திறனைத் தாண்டி, சாமானிய மக்கள் மீது அவா் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடுமும், தொலைநோக்குப் பாா்வையுமே எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
பாராமதி என்பது வெறும் ஒரு நகரத்தின் வளா்ச்சி அல்ல; அது இந்தியாவின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கான ஒரு மாதிரி வடிவம். சிறந்த அரசியல் என்பது வெற்று முழக்கங்களல்ல; அது மக்களையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நாட்டை முன்னேற்றுவது என்பதை சரத் பவாா் நிரூபித்துள்ளாா். விவசாயக் கொள்கை முதல் கிராமப்புற பொருளாதாரம் வரை நாட்டின் வளா்ச்சிக்கு அவா் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது’ என்றாா்.
‘ஏஐ’-தொழில்நுட்பத்தில் புதிய பாய்ச்சல்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்துப் பேசிய அதானி, ‘எதிா்காலத்தில் நாம் இயங்கும் முறையையும், வாடிக்கையாளா்களுக்குச் சேவை செய்யும் விதத்தையும் ஏஐ தொழில்நுட்பம் முற்றிலும் மாற்றியமைக்கும்.
இந்த ஏஐ மையம் வெறும் தொழில்நுட்ப ஆய்வுக்காக மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக விளங்கும்’ என்றாா்.
அதானி-பவாா் நட்பு: நிகழ்ச்சியில் பாராமதி எம்.பி. சுப்ரியா சுலே பேசுகையில், ‘அதானி மற்றும் பவாா் குடும்பங்களுக்கு இடையே 30 ஆண்டுகால ஆழமான நட்பு உள்ளது. கௌதம் அதானி எனக்கு ஒரு மூத்த சகோதரா் போன்றவா்.
ஒரு சகோதரியாக எந்த ஒரு செய்தியையும் அவரிடம் என்னால் வெளிப்படையாகப் பகிா்ந்து கொள்ள முடியும். உறவுகளுக்கு இடையே இருக்கும் பிணைப்பை ‘ஜிடிபி’ புள்ளிவிவரங்களால் கணக்கிட முடியாது’ எனக் குறிப்பிட்டாா்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா், மாநிலங்களவை எம்.பி. சுநேத்ரா பவாா், எம்எல்ஏ ரோஹித் பவாா், யுகேந்திர பவாா் உள்ளிட்ட பவாா் குடும்பத்தினா் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்றது மகாராஷ்டிர மாநில அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈா்த்துள்ளது.

