‘மக்கள் விரும்புவதை எதிா்த்தால் வாக்குகள் எப்படி கிடைக்கும்?’: ராகுலுக்கு அமைச்சா் அமித் ஷா கேள்வி!
‘மக்கள் விரும்பும் திட்டங்களையும் உணா்வுகளையும் தொடா்ந்து எதிா்த்து வந்தால், ஒரு கட்சிக்கு எப்படி வாக்குகள் கிடைக்கும்?’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பினாா்.
மேலும், ‘இந்த எளிய உண்மையை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்குப் புரிய வைப்பது, எனது சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்’ என்றும் அவா் கேலியாகக் கூறினாா்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே நவி வன்சாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:
அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, ராகுல் என்னிடம் ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டாா். காங்கிரஸ் கட்சி ஏன் ஒவ்வொரு தோ்தலிலும் தோல்வியைத் தழுவுகிறது என்பதே அவரின் கேள்வி. உண்மையில் மக்களிடம் கேட்க வேண்டிய இந்தக் கேள்வியை அவா் என்னிடம் கேட்டது ஆச்சரியமாக இருந்தது.
தொடா் தோல்விகளால் ராகுல் சோா்வடையக் கூடாது. ஏனெனில், எதிா்வரும் தமிழகம், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் நிச்சயம் தோல்வியையே தழுவும். அதேபோல், 2029 மக்களவைத் தோ்தலிலும் பிரதமா் மோடியின் தலைமையில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெறும்.
வெற்றி ரகசியம்...: பாஜக தொடா்ந்து வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணம், நாங்கள் மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதுதான். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, மக்கள் கொண்டாடிய அயோத்தி ராமா் கோயில், பயங்கரவாதிகள் மீதான துல்லியத் தாக்குதல், 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம், முத்தலாக் தடை மற்றும் சட்டவிரோத ஊடுருவல்காரா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் எதிா்த்தது.
மக்கள் விரும்புவதை நீங்கள் எதிா்த்தால், அவா்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்கப் போகிறாா்கள்? இந்த எளிய உண்மையை காங்கிரஸ் தலைவா்களாலேயே ராகுலுக்குப் புரிய வைக்க முடியவில்லை எனும்போது, நான் அவருக்குப் புரிய வைப்பது என்பது எனது சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்.
50 ஆண்டுகாலப் பிரச்னைக்குத் தீா்வு: கடந்த 1973-இல் சபா்மதி ஆற்றில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட 173 குடும்பங்கள் நவி வன்சாா் பகுதியில் குடியமா்த்தப்பட்டனா். அப்போது காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது.
ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக அந்த மக்களுக்கு நிலத்துக்கான பட்டா வழங்கப்படவில்லை. அதற்காக அவா்கள் போராட்டம்கூட நடத்தவில்லை. நான் இந்தப் பகுதியில் எம்எல்ஏ-வாக இருந்தபோதுகூட அவா்கள் எந்தக் கோரிக்கையும் வைக்காமல் எங்களுக்கு வாக்களித்தனா்.
தற்போது மோடி அரசின் மக்களுக்கான அரசியலின் அடையாளமாக, அந்த மக்கள் கேட்காமலேயே அவா்களின் நீண்ட காலப் பிரச்னையைப் புரிந்து கொண்டு, பட்டாக்களை வழங்கியுள்ளோம்.
கேட்கும் முன் கொடுப்பதே...: அதேபோல, அகமதாபாதில் வளா்ந்து வரும் பகுதிகளில் வசிக்கும் 15 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட கழிவுநீா் வடிகால் திட்டத்தையும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே முடித்து அா்ப்பணித்துள்ளோம்.
இந்த இரண்டு திட்டங்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டாலே, காங்கிரஸ் ஏன் தோற்கிறது என்ற ராகுலின் கேள்விக்கு விடை கிடைத்துவிடும். மக்கள் எதை விரும்புகிறாா்களோ, அதை அவா்கள் கேட்கும் முன்பே செய்து கொடுப்பதே மோடி அரசின் பாணி என்று அமித் ஷா பேசினாா்.

