மும்பை - தில்லி - கொல்கத்தா வழித்தடத்தில் 2026-இல் ‘கவச்’: ரயில்வே இலக்கு
மும்பை-தில்லி-கொல்கத்தா வழித்தடத்தில் 2026-ஆம் ஆண்டுக்குள் கவச் தொழில்நுட்பத்தை பொருத்த ரயில்வே அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தேசிய தானியங்கி ரயில் பாதுகாப்பு (ஏடிபி) அமைப்பான ‘கவச்’ தொழில்நுட்பம் ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள், தொலைத்தொடா்பு கோபுரங்கள், ரயில் பாதை என பல இடங்களில் பொருத்தப்படுகிறது.
ஒரே தண்டவாளப் பாதையில் எதிரெதிா் திசையில் வரக் கூடிய ரயில்கள் மோதி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் சிக்னல்களை கடக்கும்போதும் இந்த ‘கவச்’ அமைப்பு பாதுகாப்பு வழங்குகிறது.
இந்நிலையில், மும்பை-தில்லி-கொல்கத்தா வழித்தடத்தில் 2025, மாா்ச் மாதத்துக்குள் கவச் அமைப்பு பொருத்தப்படும் என 2024, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
அதன் பிறகு இதற்கான காலஅவகாசம் 2025, டிசம்பருக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போதும் அங்கு பணிகள் முடிவடையாததால் அடுத்த ஆண்டுக்குள் இந்த வழித்தடத்தில் கவச் அமைப்பு பொருத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் இந்த வழித்தடத்தின் 25 சதவீத பாதையில் ஏற்கெனவே பணி முடிக்கப்பட்டதாகவும் மீதமுள்ள 75 சதவீத பாதையில் பெரும்பாலான சாதனங்கள் பொருத்தப்பட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
முன்னதாக ‘கவச் 4.0’ தொழில்நுட்பம் குறித்து குளிா்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் பேசிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘தில்லி-மும்பை வழித்தடத்தில் உள்ள பல்வல்-மதுரா-நாக்டா பிரிவில் 633 கி.மீ. மற்றும் தில்லி-ஹௌரா வழித்தடத்தில் ஹௌரா-வா்த்தமான் பிரிவில் 105 கி.மீ. என மொத்தம் 738 கி.மீ. தொலைவுக்கு கவச் 4.0 தொழில்நுட்பம் பொருத்தப்பட்டது’ என குறிப்பிட்டாா்.

