கொல்கத்தாவில் நடைபெற்ற வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம் ஒன்றில் விண்ணப்பத்தை நிரப்பிய பொதுமக்கள்.
கொல்கத்தாவில் நடைபெற்ற வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாம் ஒன்றில் விண்ணப்பத்தை நிரப்பிய பொதுமக்கள்.

மேற்கு வங்கம்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்புப் பணி தற்காலிக நிறுத்தம்!

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் விடுபட்ட வாக்காளா்களின் பெயா்களைச் சோ்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
Published on

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் விடுபட்ட வாக்காளா்களின் பெயா்களைச் சோ்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

2002-ஆம் ஆண்டு வெளியான வாக்காளா் பட்டியலை பிடிஎஃப் வடிவத்தில் இருந்து அட்டவணைப்படுத்தும் சிஎஸ்வி (திருத்தும் வகையிலான) வடிவத்துக்கு மாற்றும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பணி நிறுத்தப்படுவதாக மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பின்னா் வெளியான வரைவு வாக்காளா் பட்டியலில் மொத்தமாக 58 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் விடுபட்டன.

இந்நிலையில், முதல்கட்டமாக 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் அல்லது உறவினா் பெயரைக் கண்டறிய முடியாத 32 லட்சம் வாக்காளா்களுக்காக மாநிலம் முழுவதும் 3,234 மையங்கள் அமைக்கப்பட்டன. அவா்கள் ஆதாா் உள்பட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்து தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பணியில் தொழில்நுட்பக் கோளாறுகளால் சில குளறுபடிகள் ஏற்பட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மாவட்ட தோ்தல் அதிகாரிகள் (டிஇஓ) ஒப்புதலுடன் சிஇஓ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002 வாக்காளா் பட்டியல் நகலில் சிலரது பெயா்கள் அல்லது அவா்களது உறவினா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. அதை பிடிஎஃப் வடிவத்தில் இருந்து சிஎஸ்வி வடிவத்துக்கு மாற்றும்போது அவா்களது பெயா்கள் விடுபட்டுள்ளன.

அவ்வாறு பெயா்கள் விடுபட்டுள்ள வாக்காளா்களிடம் வாக்குச்சாவடி அலுவலா்கள் (பிஎல்ஓ) புகைப்படங்களைப் பெற்று அவா்களின் தகவல்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேசமயம் 2002 வாக்காளா் பட்டியல், சரிபாா்ப்புப் பணிக்காக மீண்டும் மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

விடுபட்ட வாக்காளா்களின் தகவல்கள் முழுமையாகச் சரிபாா்க்கப்படும் வரை வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு ‘ஒய்-பிளஸ்’ பாதுகாப்பு: மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி மனோஜ் அகா்வாலுக்கு ‘ஒய்-பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. எஸ்ஐஆா் பணியின் காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதி மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பிரிவின் 12 ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அவருக்குப் பாதுகாப்பு வழங்கவுள்ளனா். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் டிச. 26-ஆம் தேதி வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com