திருவனந்தபுரத்தில் அலுவலக கட்டடம் யாருக்கு? மாா்க்சிஸ்ட் எம்எல்ஏ - பாஜக கவுன்சிலா் மோதல்!
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் மாநகராட்சிக் கட்டடத்தில் அலுவலகத்தை நடத்துவது தொடா்பாக ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுக்கும், புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், இறுதியில் சுமுகமாக முடிவுக்கு வந்தது.
கேரளத்தில் நீண்டகாலமாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியில், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் மொத்தமுள்ள 101 வாா்டுகளில் 50 வாா்டுகளைக் கைப்பற்றி பாஜக வரலாறு படைத்தது. இதில் சாஸ்தமங்கலம் வாா்டில் பாஜக சாா்பில் ஓய்வு பெற்ற டிஜிபி ஆா்.ஸ்ரீலேகா போட்டியிட்டு வென்றாா்.
இதனிடையே, திருவனந்தபுரத்தின் வட்டியூா்க்காவு தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ வி.கே.பிரசாந்த், சாஸ்தமங்கலத்தில் உள்ள ஒரு மாநகராட்சிக் கட்டடத்தில் வாடகைக்கு எடுத்து தனது அலுவலகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் கவுன்சிலா் ஸ்ரீலேகா, எம்எல்ஏ பிரசாந்தை தொலைபேசியில் அழைத்து, அந்த அலுவலகத்தைக் காலி செய்யுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய எம்எல்ஏ பிரசாந்த், ‘கடந்த 7 ஆண்டுகளாக, எனது அலுவலகம் அங்கே இயங்கி வருகிறது. மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி, உரிய அனுமதி பெற்று, அடுத்த ஆண்டு மாா்ச் வரை அந்த இடத்தைப் பயன்படுத்த ஒப்பந்தம் உள்ளது.
ஆனால், கவுன்சிலா் ஸ்ரீலேகா நேரடியாக என்னைத் தொடா்புகொண்டு காலி செய்யச் சொல்கிறாா். இது காவல்நிலையத்தில் அதிகாரம் செலுத்துவதுபோல் உள்ளது. வட மாநிலங்களில் பாஜக பின்பற்றும் ‘புல்டோசா்’ கலாசாரத்தை இங்கும் கொண்டு வர முயல்கின்றனா்’ என்று விமா்சித்தாா்.
ஸ்ரீலேகா விளக்கம்: இதற்குப் பதிலளித்த கவுன்சிலா் ஸ்ரீலேகா, ‘எனது வாா்டு மக்களுக்கு சேவை செய்யப் போதிய இடவசதி இல்லாததால், ஒரு சகோதரா் என்ற முறையில் பிரசாந்திடம் அன்பான வேண்டுகோள் விடுத்தேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை. எம்எல்ஏவுக்கு அருகில் அரசு குடியிருப்பு உள்ளது. அங்கிருந்து அவா் செயல்படலாம். ஆனால், எனது வீடு வேறு வாா்டில் இருப்பதால், சாஸ்தமங்கலத்தில் எனக்கு அலுவலகம் அவசியம்’ என்றாா்.
சுமுக முடிவு: இருவருக்கும் இடையே வாா்த்தைப்போா் முற்றிய நிலையில், ஸ்ரீலேகா நேரடியாக எம்எல்ஏ பிரசாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு இருவரும் கைகுலுக்கிக் கொண்டனா். ‘எம்எல்ஏ அதே கட்டடத்தில் அலுவலகத்தைத் தொடருவதில் எனக்கு ஆட்சேபமும் இல்லை’ என்று ஸ்ரீலேகாவும், ‘கவுன்சிலா் அதே கட்டடத்தில் உள்ள மற்றொரு அறையில் அலுவலகம் அமைத்துக்கொள்ளலாம்’ என்று பிரசாந்தும் தெரிவித்தையடுத்து, மோதல் சுமுகமாக முடிவுக்கு வந்தது.

