

கேரள முதல்வருக்கு கர்நாடக துணை முதல்வர் பதிலடி :
பெங்களூரில் அரசு சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதை விமர்சிக்கும் தொனியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதற்கு கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
பெங்களூரு, கோகிலே லேஅவுட் பகுதியில் 5 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஃபக்கீா் காலனி மற்றும் வசீம் லேஅவுட் பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலப்பகுதியை மீட்க பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதை வன்மையாகக் கண்டித்துள்ள கேரள முதல்வா் பினராயி விஜயன், வெள்ளிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில், முஸ்லிம்கள் வசித்து வந்த வீடுகளை காங்கிரஸ் அரசு இடித்துள்ளது. சங்பரிவாரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுத்திவந்த புல்டோசா் இடிப்புச் சம்பவங்கள் காங்கிரஸ் ஆட்சியிலும் நடக்கிறது. இது வேதனையையும் அதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறிவிட்டது.
இது குறித்து திங்கள்கிழமை(டிச. 29) டி. கே. சிவகுமார் பேசியதாவது: “கேரள முதல்வர் அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார். அவர் தேர்தலில் தோற்கப்போகிறார்.
கர்நாடகத்தில் அரசு சொத்தை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை. பெங்களூரில் குடிசைப் பகுதிகள் வருவதையும் விரும்பவில்லை. அரசு சொத்தை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை. அதையே நாங்கள் செய்கிறோம்” என்றார்.
இது குறித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தாரமையா, “கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறவுள்ளதையொட்டியே பெங்களூரு ஆக்கிரமிப்பு அகற்றுதல் விவகாரத்தை சர்ச்சையாக்கி பேசுகிறார் கேரள முதல்வர். இதன்காரணமாகவே, அவர் ஒரு எம்எல்ஏவையும் எம்பியையும் சம்பவ இடத்துக்கு ஆய்வுக்கு அனுப்பினார்.
இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. அங்கு வசித்து வந்த மக்கள் தற்காலிக குடிசைகளில் இருந்தனர். அவற்றையே மாநகராட்சி அப்புறப்படுத்தியிருக்கிறது.
அந்த மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டும் தருகிறது. எக்காரணத்தைக் கொண்டும் சட்டவிரோத வசிப்பிடங்களை அனுமதிக்க முடியாது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.