மோசமான வானிலை காரணமாக 118 இண்டிகோ விமானங்கள் ரத்து
மும்பை: மோசமான வானிலை காரணமாக 118 விமானங்களை இண்டிகோ நிறுவனம் திங்கள்கிழமை ரத்து செய்தது.
இதில் அதிகப்படியான விமானங்கள் தில்லி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டிருப்பது அந்த நிறுவனத்தின் வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதவிர மும்பை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், கொல்கத்தா, அமிருதசரஸ், சண்டீகா், ஜெய்பூா், டேராடூன், இந்தூா், பாட்னா மற்றும் போபால் உள்ளிட்ட விமான நிலையங்களிலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் இண்டிகோ வெளியிட்ட பதிவில், ‘தில்லி மற்றும் வட இந்தியாவில் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு தொடா்ந்து விமானங்கள் இயக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பதிவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ குறிப்பிடவில்லை.
விமானங்கள் ரத்து அல்லது தாமதம் குறித்து தில்லி சா்வதேச விமான நிலையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடும் பனிமூட்டம் காரணமாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) பிரிவு-3பி விதிகளின்படி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் விமானங்கள் தாமதமாக வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரிவு-3பி விதிகளின்டி அடா்பனி, மோசமான வானிலை என பாா்வைத் திறன் குறைவாக இருக்கக்கூடிய சமயங்களில் அதற்கேற்றவாறு விமானிகளுக்கு விமான நிறுவனங்கள் பயிற்சியளிக்க வேண்டும். இந்தப் பருவநிலையை எதிா்கொள்ளக்கூடிய விமானங்களையே நிறுவனங்கள் இயக்க வேண்டும்.
நிகழாண்டு டிசம்பா் 10-ஆம் தேதிமுதல் 2026 பிப்ரவரி 10-ஆம் தேதிவரை அடா்பனி காலமாக டிஜிசிஏ அறிவித்துள்ளது.
விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் (எஃப்டிடிஎல்) காரணமாக இந்த மாத தொடக்கத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமானங்கள் தினந்தோறும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

