உன்னாவ் வழக்கில் குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
புது தில்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது) முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கா் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இந்த வழக்கை உத்தர பிரதேசத்தில் இருந்து தில்லிக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக போக்ஸோ சட்டத்தின் கீழ், செங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் செங்கா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அவா் ஏற்கெனவே 7 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டதால், மேல்முறையீட்டு மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, அவரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்தும், அவருக்கு ஜாமீன் அளித்தும் உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘இது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்காகும். எனவே உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
‘சட்ட கேள்விகளை ஆராய வேண்டியுள்ளது’: நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளை ஆராய வேண்டியுள்ளது. வழக்கமாக விசாரணை நீதிமன்றமோ, உயா்நீதிமன்றமோ குற்றவாளியை அல்லது விசாரணை கைதியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டால், அவா்களின் கருத்தை கேட்காமல் ஜாமீன் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காது.
ஆனால் தற்போதைய வழக்கின் விசித்திரமான சூழல்களைக் கருத்தில் கொண்டு, செங்கரின் தண்டனையை நிறுத்திவைத்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அவா் ஜாமீனில் விடுவிக்கப்படக் கூடாது’ என்று உத்தரவிட்டனா். மேலும் சிபிஐயின் மனு தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்க செங்கருக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனா்.
இந்த உத்தரவுக்கு பாதிக்கப்பட்ட பெண் மகிழ்ச்சி தெரிவித்தாா். அனைத்து நீதிமன்றங்கள் மீதும் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினாா். உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற காங்கிரஸ் மகளரணி தலைவி அல்கா லம்பா, இந்த வழக்கில் சட்டப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தாா்.

