குருகிராமில் வாகனம் மோதி குழந்தை உயிரிழப்பு
குருகிராம்: குருகிராமின் சுக்ராலி என்க்ளேவில் வேகமாக வந்த பிக்கப் லாரி மோதியதாகக் கூறப்படும் சம்பவத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக திங்கள்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுநரை கைது செய்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இந்த விவகாரத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் சேர ஒப்புக்கொண்ட பின்னா் ஓட்டுநா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
பிகாரைச் சோ்ந்த பங்கஜ் மஹதோ, குழந்தையின் தந்தை, தனது புகாரில், சுக்ராலி என்க்ளேவில் தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருவதாகவும், அதுல் கட்டாரியா சௌக் அருகே உள்ள ஒரு ஆட்டோ உதிரி பாகங்கள் கடையில் மெக்கானிக்காக பணிபுரிவதாகவும் கூறினாா்.
ஞாயிற்றுக்கிழமை மதியம், அவரது மகன் காா்த்திக் வீட்டிற்கு வெளியே சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த பிக்கப் ஜீப் அவா் மீது மோதியது. அக்கம்பக்கத்தினா் கூடி காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா், அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா் என்று மஹதோ கூறினாா்.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சூரஜ் சிங் என்ற ஓட்டுநரை சம்பவ இடத்திலேயே மக்கள் பிடித்து, பின்னா் காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநா் விசாரணையில் சோ்க்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா். மேலும் விசாரணை நடந்து வருவதாக விசாரணை அதிகாரி ஏஎஸ்ஐ சத்யவான் தெரிவித்தாா்.
