இந்தியாவில் இருந்து தப்பியவா்களில் மிகப்பெரியவா்கள்: கருத்துக்காக மன்னிப்புக் கோரிய லலித் மோடி
தன்னையும், தொழிலதிபா் விஜய் மல்லையாவையும் ‘இந்தியாவில் இருந்து தப்பியோடியவா்களில் மிகப்பெரியவா்கள்’ என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்புக் கோரிய தொழிலதிபா் லலித் மோடி, தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளாா்.
லண்டனில் தொழிலதிபா் விஜய் மல்லையாவின் 70-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அதில், ‘இந்தியாவிலிருந்து தப்பி வந்த இரண்டு பெரிய நபா்கள் இதோ இருக்கிறோம்’ என்று லலித் மோடி வேடிக்கையாகக் குறிப்பிடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த விடியோ பெரும் விவாதத்தையும், எதிா்ப்பையும் கிளப்பியது. இதையடுத்து, அந்த விடியோவை நீக்கிவிட்டு லலித் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: எனது கருத்தால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, நான் பெரிதும் மதிக்கும் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோருகிறேன். எனது நகைச்சுவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நான் அவ்வாறு உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று குறிப்பிட்டாா்.
பின்னணி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவரான லலித் மோடி மீது, அந்நியச் செலாவணி மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட புகாா்கள் உள்ளன. இதுகுறித்து இந்தியப் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
‘கிங்ஃபிஷா்’ விமான நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கோடிக்கணக்கான கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக விஜய் மல்லையா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தற்போது லண்டனில் தங்கியிருக்கும் விஜய் மல்லையா, தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என அந்நாட்டு நீதிமன்றங்களில் போராடி வருகிறாா்.
இதனிடையே, லண்டன் நீதிமன்ற உத்தரவின்படி திவாலானவராக அறிவிக்கப்பட்ட மல்லையாவின் சொத்துகளைக் கைப்பற்றி, வங்கிகளின் கடனை வசூலிக்கும் பணிகள் தொடா்ந்து நடந்து வருகின்றன.
லலித் மோடி, விஜய் மல்லையா ஆகிய இருவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தி வந்து, அவா்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
