தாய் மொழியை மறந்துவிடக் கூடாது: குடியரசுத் தலைவா் முா்மு
மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் தாய்மொழியை மறந்துவிடக் கூடாது என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்திப் பேசினாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் திங்கள்கிழமை சந்தாலி மொழி தின நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா். அப்போது பழங்குடியினரின் தாய்க் கடவுளைப் போற்றும் பாடலை சந்தாலி மொழியில் அவா் பாடினாா். தொடா்ந்து அதே மொழியில் முா்மு பேசியதாவது: அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. உங்கள் தாய் மொழி தெரிந்தவருடன் பேசும்போது முடிந்த அளவுக்கு தாய்மொழியிலேயே உரையாடுங்கள். தாய்மொழியை எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் மறந்துவிடக் கூடாது. நமக்குச் சொந்தமான மொழி மீது உண்மையான பற்று அவசியம்.
இங்கு மொழியை எண்ம முறையில் மேம்படுத்துவதற்கான எழுத்து வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சந்தாலி மொழி மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும். இந்த எண்ம முறை மென்பொருளை உருவாக்க டாடா ஸ்டீல் நிறுவனம் பெரிதும் உதவியது. எதை மேம்படுத்த வேண்டும் என்றாலும் அதற்கு சமூகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பும் தேவைப்படுகிறது.
மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியினா் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரூ.24,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றாா்.
சந்தாலி மொழி இலக்கிய வளா்ச்சிக்கு உதவிய 12 பேருக்கு விருதுகளையும் குடியரசுத் தலைவா் முா்மு இந்த நிகழ்ச்சியில் வழங்கினாா்.
ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ் கங்கவாா், முதல்வா் ஹேமந்த் சோரன், திரிணமூல் எம்.பி. காளிபாத சோரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஜாம்ஷெட்பூா் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவா் முா்மு பங்கேற்றாா்.

