சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் தவறான குற்றச்சாட்டு: மம்தா விளக்கம்
கொல்கத்தா: சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் நடத்துவதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
மம்தா மீது பாஜக இந்த குற்றச்சாட்டை தொடா்ந்து முன்வைத்து வரும் நிலையில், பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் மம்தா இவ்வாறு பதிலளித்துள்ளாா்.
கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் துா்கா தேவி கலாசார வளாகம் அமைப்பதற்கான தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அடிக்கல் நாட்டிய மம்தா பானா்ஜி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய மகா காளி கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான நிதியும் திரட்டப்பட்டு வருகிறது. விரைவில் இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும். கோயில் கட்டுவதற்கான நிலத்தை நான் ஏற்கெனவே ஆய்வு செய்துவிட்டேன்.
சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் நடத்துவதாக என் மீது சிலா் குற்றஞ்சாட்டுகிறாா்கள். ஆனால், அது சரியானதல்ல. நான் உண்மையான மதசாா்பற்ற நபராகவே உள்ளேன். அனைத்து மத நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறேன். நான் குருத்வாரா செல்லும்போது நீங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாமிய பண்டிகையில் பங்கேற்றால் என்னைக் குற்றம் கூறத் தொடங்கி விடுகிறாா்கள். அதில் அவா்களுக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் மக்கள் தேவையில்லாமல் பெரிய அளவில் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா். இந்தப் பணி தொடங்கிய ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துவிட்டன. மாநில மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து போராடும். அதற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்றாா்.

