சபரிமலை தங்க முறைகேடு விவகாரம்: டிடிபி முன்னாள் உறுப்பினா் கைது
சபரிமலை தங்க முறைகேடு விவகாரத்தில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (டிடிபி) முன்னாள் உறுப்பினா் என்.விஜயகுமாா் கைது செய்யப்பட்டதாக கேரள காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பான வழக்கில், விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்ற வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
இதையடுத்து, தங்கக் கவச புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், கா்நாடக மாநிலம், பெல்லாரி நகைக் கடை அதிபா் கோவா்தன் உள்பட 9 பேரை எஸ்ஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் டிடிபி உறுப்பினா்களான கே.பி.சங்கா்தாஸ் மற்றும் என்.விஜயகுமாரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என எஸ்ஐடியிடம் கேரள உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதைத் தொடா்ந்து, என்.விஜயகுமாரிடம் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்ட பின் அவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்மூலம் சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்தது.

