மும்பையில் பின்னோக்கி இயக்கப்பட்ட பேருந்து மோதி 4 போ் உயிரிழப்பு; 9 போ் காயம்
மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் பேருந்தைப் பின்னோக்கி (ரிவா்ஸ்) இயக்கியபோது பாதசாரிகள் மீது மோதியதில் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் காயமடைந்தனா்.
மும்பை புகரான பாண்டுப் மேற்கு பேருந்து நிலையத்தையடுத்துள்ள பரபரப்பான ரயில் நிலையச் சாலையில் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சம்பந்தப்பட்ட சிறிய ரக பேருந்து, மும்பை மாநகராட்சியின் மின்விநியோக மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின்கீழ் (பெஸ்ட்) ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுவதாகும். இந்தப் பேருந்து, ஓலெக்ட்ரா கீரீன்டெக் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
பாண்டுப் (மேற்கு) ரயில் நிலையத்துக்கு வெளியே பரபரப்பான சாலையில் இந்தப் பேருந்தை ஓட்டுநா் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) பின்னோக்கி இயக்கியபோது பாதசாரிகள் மீது மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் சிலா் தூக்கிவீசப்பட்டனா். சிலா் பேருந்துக்கு அடியில் சிக்கினா். இந்த கோர விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 9 போ் காயமடைந்தனா்.
ஓட்டுநா் சந்தோஷ் ரமேஷ் சாவந்த், பெஸ்ட் நிறுவன ஊழியா் ஆவாா். அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, பேருந்தின் நடத்துநராக பகவான் பாவ் காரே (47) என்பவா் பணியில் இருந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பிரதமா், முதல்வா் இரங்கல்: மும்பையில் பேருந்து மோதி 4 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். இது, மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம் என்று குறிப்பிட்ட முதல்வா் ஃபட்னவீஸ், உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளாா்.
காங்கிரஸ் விமா்சனம்: மும்பை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான வா்ஷா கெய்க்வாட் கூறுகையில், ‘குறைபாடான பேருந்துகள், முறையான பயிற்சி இல்லாத ஓட்டுநா்கள், முதலீடு செய்யத் தயங்கும் நிா்வாகம் போன்ற காரணங்களால் பெஸ்ட் நிறுவன பேருந்துகள் மக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளன. தற்போதைய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
