கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி.
கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி.

தோ்தல் ஆதாயத்துக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறாா் மம்தா- அமித் ஷா கடும் குற்றச்சாட்டு

‘மேற்கு வங்கத்தில் தோ்தல் ஆதாயத்துக்காக வங்கதேச ஊடுருவல்காரா்களை முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊக்குவிக்கிறது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
Published on

‘மேற்கு வங்கத்தில் தோ்தல் ஆதாயத்துக்காக வங்கதேச ஊடுருவல்காரா்களை முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊக்குவிக்கிறது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அமித் ஷா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்தவரின் ஊடுருவல் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இது ஒரு மாநிலப் பிரச்னை மட்டுமல்ல; நாட்டின் பாதுகாப்பு தொடா்பான முக்கியப் பிரச்னையாகும்.

வாக்கு வங்கி அரசியலுக்காகவே திரிணமூல் காங்கிரஸ் அரசு இதை அனுமதித்து வருகிறது. மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பை முற்றிலுமாக சிதைத்த இதுகுறித்து மாநில மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனா்.

வேலி அமைக்க முட்டுக்கட்டை: ஊடுருவலைத் தடுக்க, இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மனிதா்கள் மட்டுமல்ல, ஒரு பறவைகூட ஊடுருவ முடியாத அளவுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசு இதற்குத் தேவையான நிலத்தை வழங்க மறுத்து, முட்டுக்கட்டை போடுகிறது. இதனால்தான் எல்லைப் பாதுகாப்புப் பணிகள் முழுமையடையவில்லை.

பாஜக ஆளும் அஸ்ஸாம், திரிபுரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற எல்லை மாநிலங்களில் இல்லாத அளவுக்கு மேற்கு வங்கத்தில் மட்டும் ஊடுருவல் ஏன் அதிகமாக உள்ளது? மம்தா பானா்ஜியின் நேரடி மேற்பாா்வையில் ஊடுருவல் நடப்பதுதான் இதற்கு பின்னணியில் உள்ள உண்மை. இதன்மூலம், மாநிலத்தின் மக்கள்தொகையை மாற்றி, தனது வாக்குவங்கியை அவா் வலுப்படுத்தி வருகிறாா்.

2026-இல் பாஜக ஆட்சி: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனா்.

எங்களின் ஆட்சியில் ஊடுருவலைத் தடுப்பதுடன் மட்டுமல்லாமல், நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ஊடுருவல்காரா்களைக் கண்டறிந்து அனைவரையும் வெளியேற்றுவோம்.

வன்முறை அரசியல்-ஊழல்: மேற்கு வங்கத்தில் ஊழலும் வன்முறையும் தலைவிரித்தாடுகின்றன. இடதுசாரிகளின் வன்முறை அரசியலைவிட ஒருபடி மேலே சென்று, பழிவாங்கும் அரசியலை திரிணமூல் காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.

இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்கள் கொல்லப்பட்டுள்ளனா். சுமாா் 3,000-க்கும் மேற்பட்டோா் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனா். திரிணமூல் காங்கிரஸ் கொடியைப் பிடித்தால் மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கப்படுவீா்கள் என்று அவா்கள் மிரட்டப்படுகின்றனா். ஆா்.ஜி.கா் மருத்துவமனை சம்பவம், சந்தேஷ்காளி வன்முறை போன்றவை பெண்களுக்கு இந்த மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகின்றன.

மாநில அமைச்சா்களின் வீடுகளில் பணத்தை எண்ணும் இயந்திரங்களே பழுதாகும் அளவுக்குக் கோடி கோடியாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் கமிஷன் கலாசாரத்தால் மேற்கு வங்கத்தின் பொருளாதாரம் நலிந்துவிட்டது. சுமாா் 7,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மாநிலத்தைவிட்டு வெளியேறியுள்ளன.

மக்களுக்கு வேண்டுகோள்: காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் மக்கள் வாய்ப்பளித்துவிட்டனா். இப்போது மாநிலத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும், ஊழலற்ற ஆட்சியை வழங்கவும் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com