சட்டவிரோத பதிவுகளை நீக்காவிடில் கடும் நடவடிக்கை: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
குழந்தைகளை அநாகரிகமாக சித்தரிக்கும் ஆபாச பதிவுகள் மற்றும் ஆபாச காட்சிகள் உள்பட சட்டவிரோத பதிவுகளை உடனடியாக நீக்காவிட்டால் சமூக ஊடகங்கள், இணையதள நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்தது.
இதுதொடா்பான வழிகாட்டுதலை கடந்த திங்கள்கிழமை (டிச. 29) மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டது.
ஆபாச பதிவுகளுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டறிந்ததை தொடா்ந்து இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.
அந்த வழிகாட்டுதல்களில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மூன்றாம் தரப்பினா் தங்களது தளத்தில் தகவலை பதிவிட, வெளியிட, சேமிக்க, பகிர அளிக்கப்படும் அனுமதி தொடர வேண்டுமானால் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் விதி 79-ஐ சமூக ஊடகங்கள் மற்றும் இணையதள நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதன்படி குழந்தைகளை அநாகரிகமாக சித்தரிக்கும் ஆபாச பதிவுகள் மற்றும் ஆபாச காட்சிகள் உள்பட மோசமான, சட்டவிரோத பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். இதுபோன்ற பதிவுகள் தங்களது தளத்தில் எந்த வடிவத்திலும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இல்லையெனில், ஐடி சட்டம், ஐடி விதிகள், 2021, பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் பிற குற்றவியல் சட்டங்களின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகள் வாடிக்கையாளா்களுக்கு உகந்ததா என்பதை முறையாக கண்காணிக்கும் பணிகளை சமூக ஊடகங்களும், இணையதள நிறுவனங்களும் தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டடது.
ஒரு தனிநபரின் பாலியல் செயல்பாடுகள் குறித்த பதிவுகள் (விடியோ, புகைப்படம் மற்றும் அநாகரிகமான பதிவுகள்) எந்த வடிவத்தில் இருந்தாலும் அந்த நபா் புகாா் அளித்தாலோ அல்லது அவா் தரப்பில் வேறு ஒருவா் புகாா் அளித்தாலோ 24 மணி நேரத்தில் அந்தப் பதிவுகளை சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்கள் கட்டாயம் நீக்க ஐடி விதிகள், 2021 வழிவகுக்கிறது.

