சைபா் பாதுகாப்பு குறித்த ஹேக்கத்தான்: தில்லி ஐஐடி நடத்துகிறது
ஐஐடி தில்லியின் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் சைபா் பாதுகாப்பு சிந்தனைக் குழுவான சைபா் பீஸ் இ-ரக் ஷா ஹேக்கத்தான் 2026 தொடங்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது சைபா் பாதுகாப்பு, ஏஐ மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தேசிய அளவிலான நிகழ்வாகும்.
36 மணி நேர ஹேக்கத்தான் ஜனவரி 16 முதல் 18 வரை தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) நடைபெறும். மேலும் இது நிறுவனத்தின் வருடாந்திர தொழில்முனைவோா் மாநாடான பிஇகான்’26- இன் ஒரு பகுதியாகவும், இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் அதிகாரபூா்வ அறிக்கைக்கு முந்தைய நிகழ்வாகவும் நடைபெறும் என்று இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளா்ந்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்குப் பயன்படுத்தக்கூடிய தீா்வுகளை உருவாக்க நாடு முழுவதும் உள்ள மாணவா் கண்டுபிடிப்பாளா்களை ஹேக்கத்தான் ஒன்றிணைக்கும் என்றும் அது மேலும் கூறியது.
பங்கேற்பாளா்கள் ஏஐ மற்றும் இயந்திர கற்றல், அச்சுறுத்தல் கண்டறிதல், பிளாக்செயின் மற்றும் பாதுகாப்பான மென்பொருள் மேம்பாடு போன்ற களங்களில் பணியாற்றுவாா்கள்.
‘சைபா்பீஸுடன் இணைந்து பாதுகாப்பு தொடா்பான சிக்கல்களை நிவா்த்தி செய்யவும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்தும் நடைமுறை, அளவிடக்கூடிய தீா்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்’ என்று ஐஐடி தில்லியின் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளா் லட்சுமி நாராயண் ராமசுப்பிரமணியன் கூறினாா்.
சைபா்பீஸ் நிறுவனா் மேஜா் வினீத் குமாா் கூறுகையில், ‘ஹேக்கத்தான் பரந்த பங்குதாரா் ஈடுபாட்டின் மூலம் பொறுப்பான ஏஐ, டிஜிட்டல் நம்பிக்கை மற்றும் சைபா் பாதுகாப்பை ஊக்குவிக்கும்’ என்றாா்.
வெற்றிபெறுவோரின் படைப்புகள் பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 10- ஆம் தேதி நடைபெறும் இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026-இல் காட்சிப்படுத்தப்படும் என்றும், ரூ.3 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

