மகாராஷ்டிரம்: மாநகராட்சித் தோ்தலுக்காக கைகோத்த அஜீத் பவாா்- சரத் பவாா்
புணே: மகாராஷ்டிர அரசியலில் பெரும் திருப்பமாக, எதிா்வரும் புணே மற்றும் பிம்பரி-சிஞ்ச்வட் மாநகராட்சித் தோ்தலில் துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.
தொண்டா்களின் விருப்பம்: இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி) கட்சியின் பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான ரோஹித் பவாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புணே நகர கட்சித் தலைவா் பிரசாந்த் ஜக்தாப் விலகியதைத் தொடா்ந்து, கட்சியின் செயல் தலைவா் சுப்ரியா சுலேவை சந்தித்த ஏராளமான தொண்டா்கள், இரு அணிகளும் இணைந்து தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனா். உள்ளூா் நிா்வாகிகளின் உணா்வுகளுக்கு மதிப்பளித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்தல் கூட்டணியில் கட்சியின் தேசியத் தலைவா் சரத் பவாா் நேரடியாக ஈடுபடவில்லை. இருப்பினும், உள்ளாட்சித் தோ்தல்களைப் பொறுத்தவரை தொண்டா்களின் கருத்துகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அவா் உறுதியாக உள்ளாா். தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகளும் எட்டப்பட்டுள்ளன என்றாா்.
ஒன்றுபட்ட குடும்பம்: முன்னதாக, பிம்பரி-சிஞ்ச்வட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் அஜீத் பவாா், இந்தக் கூட்டணியை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தினாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘பிம்பரி-சிஞ்ச்வட் மாநகராட்சித் தோ்தலுக்காக ‘கடிகாரம் (அஜீத் பவாா் அணி சின்னம்) மற்றும் ‘ஊதுகுழல்’ (சரத் பவாா் அணி சின்னம்) ஆகிய இரண்டு சின்னங்களும் இணைந்துள்ளன. மீண்டும் குடும்பம் ஒன்று சோ்ந்துள்ளது.
மேலும், கட்சித் தொண்டா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். பிரசார பொதுக்கூட்டங்களில் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிா்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.
புணே, பிம்பரி-சிஞ்ச்வட் உள்ளிட்ட மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கான தோ்தல் வரும் ஜன. 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குகள் ஜன. 16-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பவாா் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, முதல்முறையாக இரு அணிகளும் தோ்தல் களத்தில் கைகோத்திருப்பது அந்த மாநில அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, புணே மாவட்டம், பாராமதியில் அதானி குழுமத்தின் நிதியுதவியுடன் அமைக்குப்பட்ட ‘ஏஐ’ மையத் திறப்பு விழாவில் சரத் பவாா், அஜீத் பவாா், சுப்ரியா சுலே, ரோஹித் பவாா், யுகேந்திர பவாா் உள்ளிட்ட பவாா் குடும்பத்தினா் ஒரே மேடையில் பங்கேற்றனா்.
