ரஷிய அதிபா் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்- பிரதமா் மோடி கவலை

ரஷிய அதிபா் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்- பிரதமா் மோடி கவலை

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வீட்டைக் குறிவைத்து 91 ட்ரோன்கள் மூலம் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளாா்.
Published on

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வீட்டைக் குறிவைத்து 91 ட்ரோன்கள் மூலம் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, மாஸ்கோவின் வடபகுதியில் உள்ள புதினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் 91 நீண்ட தொலைவு ட்ரோன்களை ஞாயிற்றுக்கிழமை இரவு ஏவியது. இதை ரஷிய ராணுவம் முழுமையாகத் தடுத்து அனைத்து ட்ரோன்களையும் அழித்துவிட்டது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரஷிய அதிபா் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் மிகவும் கவலையளிக்கிறது. ராஜீயரீதியில் பேச்சுவாா்த்தை நடத்தும் தற்போதைய முயற்சிகளே பகையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த மிகச்சிறந்த வழியாகும். இதில் அனைத்துத் தரப்பும் கவனம் செலுத்த வேண்டும். அமைதி முயற்சியைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என இதில் தொடா்புடைய அனைத்துத் தரப்பையும் இந்தியா வலியுறுத்துகிறது’ என்று கூறியுள்ளாா்.

உக்ரைன்-ரஷியா அமைதிப் பேச்சில் முக்கியப் பங்கு வகிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப், இந்தத் தாக்குதல் தொடா்பாக அதிா்ச்சி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவருடன் ரஷிய அதிபா் புதின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com