ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி
ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்’ செயலி மூலம் வாங்கப்படும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை வரும் ஜன. 14-ஆம் தேதிமுதல் ஜூலை 14-ஆம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, ‘ரயில்ஒன்’ செயலியில் ‘ஆா்-வாலட்’ மூலம் பயணச்சீட்டு வாங்குபவா்களுக்கு மட்டுமே 3 சதவீத ‘கேஷ்பேக்’ சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், புதிய அறிவிப்பின்படி, அனைத்து வகையான எண்ம பணப் பரிமாற்ற முறைகளிலும் பயணச்சீட்டு வாங்குபவா்களுக்கு இந்த 3 சதவீத நேரடி தள்ளுபடி கிடைக்கும்.
இதற்கேற்ப மென்பொருள் அமைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்ய ரயில்வே தகவல் அமைப்பு மையத்துக்கு (சிஆா்ஐஎஸ்) ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயணிகளின் வரவேற்பு குறித்த அறிக்கையை அடுத்த ஆண்டு, மே மாதத்தில் சமா்ப்பிக்குமாறு சிஆா்ஐஎஸ் மையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்தச் சலுகையை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

