உ.பி.யில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு
உத்தர பிரதேசத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் தேதி டிச. 31-இல் இருந்து ஜன. 6-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவ. 4-ஆம் தேதிமுதல் உத்தர பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு டிச. 26-ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 31-ஆம் தேதி வெளியிடப்பட இருந்தது.
இந்நிலையில், மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி நவதீப் ரின்வா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
வரைவு வாக்காளா் பட்டியல் ஜன. 6-ஆம் தேதி வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் தங்கள் பெயா் சோ்ப்பு, நீக்கம் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை ஜன. 6 முதல் பிப். 6 வரை பொதுமக்கள் சமா்ப்பிக்கலாம்.
கணக்கீட்டுப் படிவங்கள் தொடா்பாக முடிவு எடுத்தல், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களைத் தீா்த்து வைத்தல் உள்ளிட்ட பணிகள் ஜன. 6 முதல் பிப். 27 வரை நீடிக்கும். மாா்ச் 6-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, உத்தர பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடா்ந்து, 2.89 கோடி வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நவதீப் ரின்வா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
