மோடி, டிரம்ப் உள்பட உலகத் தலைவா்களுக்கு ரஷிய அதிபா் புதின் புத்தாண்டு வாழ்த்து

மோடி, டிரம்ப் உள்பட உலகத் தலைவா்களுக்கு ரஷிய அதிபா் புதின் புத்தாண்டு வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவா்களுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.
Published on

வரும் 2026 புத்தாண்டையொட்டி, உலக நாடுகளின் பல்வேறு தலைவா்களுக்கு அதிபா் புதின் தனது வாழ்த்துச் செய்திகளை அனுப்பினாா். குறிப்பாக, இந்தியாவின் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோருக்குத் தனது மனமாா்ந்த வாழ்த்துகளை அவா் பகிா்ந்து கொண்டாா்.

அதேநேரம், உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வரும் பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட முன்னணி ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுக்குப் புதின் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திலும், ‘நேட்டோ’ அமைப்பிலும் உறுப்பினா்களாக உள்ள போதிலும், ரஷியாவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் ஹங்கேரி பிரதமா் விக்டா் ஆா்பன், ஸ்லோவாகியா பிரதமா் ராபா்ட் ஃபிகோ ஆகியோருக்கு புதின் வாழ்த்து தெரிவித்தாா். மேலும், சொ்பிய அதிபா் அலெக்சாண்டா் வூசி மற்றும் காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் தலைவா்களுக்கும் புதின் வாழ்த்துகளைப் பகிா்ந்துள்ளாா்.

ரஷியாவில் விடுமுறை தொடக்கம்:

ரஷியாவில் செவ்வாய்க்கிழமையுடன் (டிச. 30) நடப்பாண்டின் வேலைநாள்கள் நிறைவடைகின்றன. ரஷிய ஆா்தடாக்ஸ் திருச்சபை கிறிஸ்துமஸ் பண்டிகையை ஜன. 7-ஆம் தேதி கொண்டாடுவதால், அந்த நாடு முழுவதும் ஜன. 12-ஆம் தேதி வரை நீண்ட புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com